கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி படுகொலை: இறுதி ஊர்வலத்தில் கலவரம்; கடைகள் சூறை

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் (36) இறுதி ஊர்வலத்தின்போது காவல் துறை வாகனத்துக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டன.
துடியலூர் சந்திப்புப் பகுதியில் கொளுத்தப்பட்ட காவல் துறை ஜீப்.
துடியலூர் சந்திப்புப் பகுதியில் கொளுத்தப்பட்ட காவல் துறை ஜீப்.

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் (36) இறுதி ஊர்வலத்தின்போது காவல் துறை வாகனத்துக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டன. கல்வீச்சில் ஏராளமான பேருந்துகள், தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இவர் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர் மில் அருகே மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
காலை 11.50 மணியளவில் புறப்பட்ட ஊர்வலம், பிற்பகல் 3 மணியளவில் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து துடியலூர் மின்தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
அவரது சடலத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முழு அடைப்பு போராட்டம்: இதைக் கண்டித்து இந்து முன்னணி அழைப்பின்பேரில், கோவை மாநகரம், புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. காலாண்டுத் தேர்வுகள் வரும் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு: 20-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து மாநகர, புறநகர பேருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
பல பகுதிகளில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஊர்வலப் பாதையில் கலவரம்: இறுதி ஊர்வலம் சென்றபோது வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் மூடப்பட்டிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஏ.டி.எம். மையங்கள், மருத்துவமனைகள் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் கண்ணாடிகள் உடைந்தன.
சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் பலவும் உடைக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. கொடிக் கம்பங்கள், விளம்பரப் பதாகைகளும் சேதப்படுத்தப்பட்டன.
தயிர் இட்டேரி ரோடு, சுப்பிரமணியபாளையம் சாலை ஆகிய இடங்களில் திமுக கட்சி அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது.
வழிபாட்டுத் தலங்கள்: பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் அருகே இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். 4 காவல் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.
கடைகள் சூறை: செல்லிடப்பேசி கடைகளைத் தாக்கியபடியே வந்த ஊர்வலக்காரர்கள், ஒருகட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள், உபகரணங்களை எடுத்துச் சென்றனர்.
காவல் வாகனம் எரிப்பு: ஊர்வலம் துடியலூரை அடைந்தபோது காவல் துறை ஜீப்பை புரட்டிப்போட்ட ஒரு கும்பல் அதற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது.
அதேபோல், அப்பகுதியில் இருந்த இரு உணவகங்கள், செல்லிடப்பேசி கடை, செருப்புக் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், தடியடி நடத்தினர்.
காவலர், பாஜக பிரமுகர்கள் காயம்: ஒரிடத்தில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றது.
இதில் தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார்.
அதேபோல், துடியலூரில் நடைபெற்ற கலவரத்தில் பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார் உள்ளிட்ட இருவருக்கு மண்டை உடைந்தது.
பெட்ரோல் குண்டுவீச்சு: ஆர்.எஸ்.புரம் சண்முகம் சாலையில் உள்ள மசூதி மீது வெள்ளிக்கிழமை காலை 3.40 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் பல மசூதிகள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
கலவரப் பகுதியில் அதிகாரிகள்: துடியலூரில் கலவரம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், ஏ.டி.ஜி.பி. திரிபாடி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com