வரலாற்று ஆவணங்கள் இல்லாத ராணி வேலு நாச்சியார் மணிமண்டபம்

சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீர மங்கை ராணி வேலுநாச்சியார் மணிமண்டபத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள், வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிமண்டபத்தில் உள்ள  ராணி வேலுநாச்சியாரின்  வெண்கல உருவச் சிலை
மணிமண்டபத்தில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் வெண்கல உருவச் சிலை

சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீர மங்கை ராணி வேலுநாச்சியார் மணிமண்டபத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள், வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் பகுதியை 1749 முதல் 1762 வரை ஆட்சி செய்த மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும், சக்கந்தி ஜமீன் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாகப் பிறந்தவர் ராணி வேலுநாச்சியார். சிறு வயதிலேயே போர்க்களம் சென்று வாளெடுத்து போர் புரியும் ஆற்றலும், வீரமும் பெற்று விளங்கிய வேலுநாச்சியார், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு பட்டத்து ராணியானார். முத்துவடுகநாதத் தேவர் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்தபோது, ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்ததால், கிழக்கிந்தியக் கம்பெனிப் படையும், நவாப் படையும் இணைந்து காளையார்கோயிலில் தங்கியிருந்த முத்துவடுகநாதர் மீது 25.06.1772 இல் போர் தொடுத்தன. இதில், முத்துவடுகநாதத் தேவர் பீரங்கி குண்டு பட்டு இறந்தார். இதனால் சிவகங்கை சீமையின் பிரதானி தாண்டவராயபிள்ளையோடு வேலுநாச்சியாரும், இளவரசி வெள்ளச்சி நாச்சியாரும் விருப்பாச்சியில் தஞ்சம் புகுந்தனர். மூவரையும், விருப்பாச்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர் உபசரித்து, திண்டுக்கல் மன்னர் ஹைதர் அலியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் பிறகு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹைதர் அலியின் படை உதவியுடன் மன உறுதியோடு சிவகங்கையை மீட்டு பரம்பரை சின்னமான அனுமன் கொடியை அரண்மனையில் பறக்க விட்டார் வேலுநாச்சியார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட ராணி வேலுநாச்சியார் 25.12.1796 இல் மறைந்தார். இந்த தினத்தை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் ஆவார். இந்நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் ராணி வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் ராணி வேலுநாச்சியாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் 18.07.2014இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபம் தற்போது சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலக கண்காணிப்பில் உள்ளது.
இந்த மணிமண்டபத்திற்கு தினசரி வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
மணிமண்டபத்தில், ராணி வேலுநாச்சியாரின் வெண்கல உருவச்சிலை உள்ளது. ஆனால் அவரது வரலாற்றை அறியும் வண்ணம் புகைப்படங்களோ, வரைபடங்களோ, கல்வெட்டுப் பதிவுகளோ இடம்பெறவிலை. இதனால் சுற்றுலாப்பயணிகள் அவரது வரலாறு குறித்த செய்திகளை அறியமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் அடிப்படை வசதிகளான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் இல்லாததாலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வளாகத்தில் உள்ள பூங்காவில் நிழல் தரும் மரங்கள் இல்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வந்தவுடன் திரும்பிச் சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.பாலகிருஷ்ணன் (பணி நிறைவு)கூறியது: மணிமண்டபம் அமைக்கப்படுவதின் அடிப்படை நோக்கம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, வீரம், புகழ் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். மணிமண்டபத்தில் அவரது வரலாற்றை அறியும் வண்ணமாக புகைப்படமோ, வரைபடமோ அல்லது வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்ற கல்வெட்டுகளோ இல்லாதது பெரும் குறையாக உள்ளது. மணிமண்டப வளாகத்திற்குள் கழிப்பிட வசதி, குடிநீர் வசதியும் இல்லாததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வீரமங்கை வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் அவரது வரலாறை விளக்கும் முகமாக புகைப்படம் அல்லது வரைபடங்களை அமைத்தும், அவரது வாழ்க்கைச் சுருக்கத்தை கல்வெட்டில் எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் சிறு நூலகம் அமைத்து, அதில் சிவகங்கை மாவட்ட வரலாறு மற்றும் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வைக்க வேண்டும். இதனால் சுற்றுலா வரும் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர் என்றார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ஒருவர் கூறியது:
ராணி வேலுநாச்சியார் குறித்த வரலாறு சம்பந்தமான நிகழ்வுகளைச் சேகரித்து வருகிறோம். அவை முழுமையாக கிடைத்தவுடன், சென்னை செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று மணி மண்டபத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com