திருமணமான 8 நாளில் கணவரைக் கொன்ற பெண்: காரணம் அழகல்ல; சமுதாயமே

பண்ருட்டி அருகே திருமணமாகி 8 நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், செம்மண்டலத்தில் உள்ள இளம் சீறார் குழுமத்தில் தங்க வைத்துள்ளனர்.
திருமணமான 8 நாளில் கணவரைக் கொன்ற பெண்: காரணம் அழகல்ல; சமுதாயமே
Updated on
2 min read

கடலூர்: பண்ருட்டி அருகே திருமணமாகி 8 நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், செம்மண்டலத்தில் உள்ள இளம் சீறார் குழுமத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் திருமணமான அப்பெண், 18 வயது பூர்த்தியாகாதவராக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.


கொலை குறித்து வெளியான செய்திகளில், கணவர் அழகாக இல்லை என்பதால், புது மணப்பெண் இந்த கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இது தலைப்புச் செய்தியாக மாறியதோடு, இந்த செய்தி பற்றி அறிந்து கொள்ள பெண்களும்(?!) தனிக் கவனம் செலுத்தினர். உண்மையில் இந்த கொலை எதற்காக நடந்திருக்கும் என்று அறிந்து கொள்ள நினைத்தனர்.

செய்திகளில் வெளியாகும் தலைப்புக்கும், உண்மைக்கும் சிறிதும் தொடர்பில்லை. உண்மை என்னவென்று ஆராய்ந்ததில், 18 வயது பூர்த்தியாகாத அப்பெண் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும், கட்டாயப்படுத்தியே திருமணம் நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தாம்பத்திய பிரச்னையில் இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமணத்துக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால் கொலை செய்யலாம் என்று நியாயப்படுத்திவிட முடியாது. அதே சமயம், திருமணம் என்பது இரு தரப்பு சம்மதத்துடனும் நடத்தப்பட்டால் இதுபோன்ற சம்பவங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

சம்பவத்தின் பின்னணி:

பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை, வால்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராணி. இவரது மகன் ரமேஷ் (29), சிற்பி.

இவருக்கும், கடலூர் முதுநகர், மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி மகள் விஜி (18) என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி திருமணம்  நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி கடலூர், முதுநகரில் உள்ள விஜி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திங்கள்கிழமை பிற்பகல் புதுமணத் தம்பதி திருவதிகைக்கு வந்துள்ளனர். ரமேஷின் தாய் ராணி கடை வீதிக்குச் சென்றிருந்த போது, விஜியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது, ரமேஷ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம்  விஜி, வீட்டுத் தோட்டத்தில் சலவை செய்துகொண்டிருந்த போது தாடி வைத்த நபர் ஒருவர் கணவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகத் கூறினார்.  இதில் சந்தேகமடைந்த போலீஸார் விஜியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கூறியதாவது: தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ரமேஷை கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தனர். திங்கள்கிழமை தாம்பத்ய வாழ்க்கை தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர், ரமேஷ் தூங்கி விட்டார். அப்போது, கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு நாடகமாடியதாக தெரிவித்தார்.  இதையடுத்து, போலீஸார் விஜியை கடலூர் செம்மண்டலத்தில் உள்ள இளம் சீறார் குழுமத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com