ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை: மு.க. ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றார் மு.க. ஸ்டாலின். 
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை: மு.க. ஸ்டாலின்

திருவாரூர், ஏப் 24: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றார் மு.க. ஸ்டாலின். 

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கும்பகோணம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாளை (ஏப்.25) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வந்தார். வரும் வழியில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து திருவாரூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணியிடம் மனு கொடுத்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: திமுக தலைவர் மு. கருணாநிதி யின் சட்டப் பேரவைத் தொகுதியான திருவாரூர் தொகுதியில் பல்வேறு அடிப்படை மக்கள் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தேன். ஆட்சியர் விடுப்பில் சென்றுள்ளதால் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணியிடம் மனு கொடுத்தேன். 

மனுவில் கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு திருவாரூர் தொகுதியில் ஆய்வு செய்த போது அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை, அத்துடன் சுகாதாரக்கேடுகள் இருந்தது. போதுமான நிதிஒதுக்கீடு செய்யாமல் மாவட்டத்தில் சாலைகள் சீரமைக்கவில்லை. குடிநீர்த்தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் திருவாரூர் பேருந்து நிலையம் அமைக்க நிதிஒதுக்கி நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து நிலையப் பணிகளை முழுமைப்படுத்தாமல் உள்ளது. இதையெல்லாம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மர்மமாக உள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை தேவை என்பது போல், கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். திமுக கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் விவசாயிகளின் நலனுக்காகவே தவிர கூட்டணிக்கானது அல்ல என்றார் ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com