
தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஆர்.கே. இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, அந்தக் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேதாஜி நகர் பகுதியில் கடந்த 6 -ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரியை வைத்து, அதன் மீது தேசியக் கொடியைப் போர்த்தியபடி வாகனத்தில் வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பிரசாரம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், பிரசார நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த குப்பன் உள்ளிட்ட சிலர் மீது இரு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த பிரசாரத்தில் மாஃபா பாண்டியராஜனும் பங்கேற்றதால், போலீஸார் அவரையும் விசாரணைக்காக தேடி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டியராஜன் மற்றும் அழகு தமிழ் செல்வி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.