மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மே தினம்: தலைவர்கள் வாழ்த்து
Published on
Updated on
2 min read

மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தொடர்ந்து திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் 20 சதவீத போனஸூம், ஊக்கத் தொகையும் அளித்தது மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களை உருவாக்கி, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது திமுக ஆட்சிதான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர்: மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தொடர்ந்து 6 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமையை தடுத்திருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், உழவர்களைக் கேலி செய்து மகிழ்கின்றன. மனசாட்சி இல்லாத, தீய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்ததன் பயனை தமிழகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும். அதன் பின்னர் பாட்டாளிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அரசும், தொழிலாளர் துறையும், அதிகாரிகளும், சில நிறுவனங்களோடு கைகோர்த்து தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்து தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் பறிக்கின்றன.
இந்த நிலை மாறவும், தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாகவும் வாழ்த்துக்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை நாளாகிய மே தினத்தில் தமிழகத்தில் அல்லல்படும் ஆலைத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் இடர்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழும் நிலை மலரட்டும். மதிமுக சார்பில், மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என புழல் சிறையில் இருந்தபடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் வைகோ.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் உழைக்கும் வர்க்கத்தினரின் துயர் துடைக்க எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதோடு, ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அதன் அடிப்பயையில் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைத்து வளங்களை பெற்று வாழ வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை கருத்தில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன. சேலம் உருக்காலை உள்பட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதில் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
எதேச்சதிகார பாதையில் நாட்டை செலுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை, தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்: இந்த மே தினத்தில் உலகமயமாக்கலுக்கு எதிராக, மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் திரள முன்வரவேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான் இன்றைய சவால்களை சந்திக்க மிகப் பொருத்தமான ஆயுதமாக அமையும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்: உழைப்பாளர் தினம் ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பதாக அமைந்துவிடக் கூடாது. அவர்களின் குறை அறியும் நாளாக, குறை தீர்க்கும் நடவடிக்கைகளைத் தொடங்கும் நாளாக மாற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தொழிலாளர் நலனுக்கான புதியத் திட்டங்கள், புதிய செயல்பாடுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: தொழிலாளர்களின் உழைப்பு ஈவிரக்கமின்றிச் சுரண்டப்படுவது இன்றும் உலகம் முழுவதும் தொடர்கிறது. கூடுதல் நேரம், குறைந்த ஊதியம், சுகாதாரமில்லாத பணியிடம், அடிப்படை வசதிகள் இல்லாத வாழ்விடம் போன்ற அவலநிலை நீடிக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் நலன்களையும் உரிமைகளையும் மீட்கவும் காக்கவும் வேண்டி நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com