

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. புதன்கிழமை, பிச்சிப்பூ கிலோ ரூ. 1,325-க்கு விற்பனையானது.
இந்தப் பூச்சந்தைக்கு உள்ளூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் பலவகை பூக்கள் வந்து குவிகின்றன. இங்கிருந்து கேரளம், வெளிநாடுகளுக்கும், செண்ட் நிறுவனங்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், ஆடி மாதத்தில் சுப முகூர்த்த நாள்கள் அதிகம் இல்லாததாலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கோயில்களுக்கு பூக்கள் தேவைப்பட்டதாலும் அன்றைய நாள்களில் மட்டும் பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. மற்ற நாள்களில் பூ விலை குறைந்தே காணப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஆக. 17) ஆவணி மாதப் பிறப்பையொட்டி, கேரளத்துக்கு பூக்களின் தேவை அதிகமாகக் காணப்பட்டது. எனவே, தோவாளை சந்தையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. புதன்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு):
மல்லி - ரூ. 700, பிச்சி - ரூ. 1,325, முல்லை - ரூ. 1,000, தோவாளை அரளி - ரூ. 230, சேலம் அரளி ரூ. 200, வாடாமல்லி - ரூ. 70, சம்பங்கி - ரூ. 100, கனகாம்பரம் - ரூ. 600, பாக்கெட் ரோஸ் - ரூ. 60, பட்டன் ரோஸ் - ரூ. 150, கொழுந்து - ரூ. 150, மரிக் கொழுந்து - ரூ. 170, மஞ்சள் நிற கேந்தி - ரூ. 60, ஆரஞ்சு நிற கேந்தி - ரூ.100.
இந்த விலை உயர்வால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.