"எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்'

"எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்'

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும் என்று சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
Published on

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும் என்று சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மதுரை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் தற்போது சேலம் உள்பட பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தாலும், இறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதது. டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க 25 ஆயிரம் மஸ்தூர்கள், 3,500 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5,458 கைத்தெளிப்பான்கள், 4669 புகை இந்திரங்கள், 270 வாகன புகை தெளிப்பான்கள், 10,197 புகை தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மத்திய அரசின் திட்டம். அது எங்கு அமைய வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகத்தில் 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் மதுரை தோப்பூரும் ஒன்று. இந்த 5 இடங்களிலும் ஏற்கெனவே மத்திய அரசின் குழு பார்வையிட்டு விவரங்களை பெற்றுச் சென்றுள்ளது. தற்போது இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் உப குழு அமைக்கப்பட்டு 5 இடங்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்ய முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிகாரிகள் விருப்பு, வெறுப்பு, பாரபட்சம் இன்றி செயல்பட்டு வருகிறோம். எய்ம்ஸ் எங்கு அமைந்தாலும் அங்கு முழு முழுமூச்சுடன் பணியாற்றுவோம். மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே சில மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பது தெரிந்து விடும் என்றார்.
மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்டு முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.
சூப்பர் ஸ்பெஸாலிட்டி கட்டட ஒப்பந்ததாரருக்கு கண்டிப்பு: அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறைச் செயலர் அதுதொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மகப்பேறு பிரிவில் இருந்த பெண்களிடம் சிகிச்சை விவரங்கள் மருத்துவமனை தொடர்பான குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஸாலிட்டி கட்டடத்துக்குச் சென்ற அவர், அங்கு அமையவுள்ள பிரிவுகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஒப்பந்ததாரர்களிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர் பணிகள் தாமதமாக நடப்பதைக் கண்டு ஒப்பந்ததாரர்களை கண்டித்து, மதுரை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவமனை இது. தேவையான நிதி வசதி, பொருள்கள் என அனைத்தும் தடையின்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் இனியும் தாமதிக்கக் கூடாது. கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
அப்போது ஒப்பந்ததாரர் தரப்பில் பகல், இரவாக வேலை பார்ப்பதாகவும் அக்டோபர் மாதம் தரைத்தளம், முதல் தளமும் முடிக்கப்படும் என்றும், டிசம்பரில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும் என்றார். மருத்துவமனை டீன் மருதுபாண்டி, கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் செந்தில், அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் உள்பட துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com