கட்டுப்பட மறுக்கும் டெங்கு காய்ச்சல்: வாழ்வியல் முறையை மாற்றிக் கொண்டதா "ஏடிஸ்' கொசு?

கட்டுப்பட மறுக்கும் டெங்கு காய்ச்சல்: வாழ்வியல் முறையை மாற்றிக் கொண்டதா "ஏடிஸ்' கொசு?

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கும் ஏடிஸ் கொசுக்கள் முன்னைக் காட்டிலும் தற்போது வலிமையானதாக மாறி இருப்பதே டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவுவதற்கு காரணம் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
Published on

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கும் ஏடிஸ் கொசுக்கள் முன்னைக் காட்டிலும் தற்போது வலிமையானதாக மாறி இருப்பதே டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவுவதற்கு காரணம் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தபோதிலும்

பலி எண்ணிக்கை தற்போதைய அளவுக்கு இருந்ததில்லை.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் டெங்குவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெங்குவைப்
பரப்பும் கொசுக்களின் மீது மருத்துவர்களின் கவனம் விழுந்துள்ளது. இந்நிலையில்தான், ஏடிஸ் கொசுக்களின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதும், கொசுக்கள் முன்பை விட வலிமையானவையாக மாறியிருப்பதும் தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஏடிஸ் கொசுவை, ஒழிக்கப்பட வேண்டிய கொசுக்களின் பட்டியலில் உலக சுகாதார மையம் வைத்துள்ளது. இந்தக் கொசுவின் பாதிப்பு சுமார் 130 நாடுகளில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கான்கிரீட் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்களில் மிகச் சிறிய அளவில் நல்ல நீர் தேங்கியிருந்தாலும் அதில், சுமார் 200 முட்டைகள் வரை இட்டு இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் திறன் படைத்த ஏடிஸ் கொசு, 16 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வளரக் கூடியதாகும். அதேபோல, 60 முதல் 80 டிகிரி ஈரப்பதத்தில் இருக்கக் கூடியதாகும். முட்டையிட்டு கூட்டுப் புழுவாக மாறிய 15}ஆவது நாளில் முழு வளர்ச்சி அடைந்த ஏடிஸ் கொசு உருவாகும்.
டெங்கு கொசு பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். பெண் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடப் புரதம் தேவை என்பதாலும், அந்தப் புரதம் மனித ரத்தத்தில்கிடைப்பதாலுமே அவை மனிதர்களைத் தேடிவந்து கடிக்கின்றன.
ஏடிஸ் கொசுக் கடியால் டெங்கு ஏற்பட்டவருக்கு கடுமையான காய்ச்சல், உள் கண் வலி, உடல் வலி, வாந்தி, மலம் கருப்பாக வெளியேறுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்படும். உடலில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைவதும் டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.
பாதிக்கப்பட்ட ஏழாவது நாளில்தான் "ஐ.எம்.ஜி. எலிஸô' பரிசோதனை மூலமாக டெங்கு பாதிப்பை உறுதி செய்ய முடியும். டெங்கு பாதித்தவரைக் கடிக்கும் கொசுக்கள் அந்த நோயை மற்றவர்களுக்கு எளிதாகப் பரப்புகின்றன.
இவை, ஏடிஸ் கொசுகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல்கள் என்றாலும், அதிர்ச்சியூட்டும் வகையில் ஏடிஸ் கொசுக்கள் மிகவும் வலிமையான நிலையை அடைந்திருப்பதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிக அளவில் காணப்பட்டு வந்தது. தற்போது, காலநிலை மாற்றம், டெங்கு கொசுவின் வாழ்வியல் மாற்றம் காரணமாக, தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.


கொசுவின் வாழ்வியல் மாற்றம்

பொதுவாக ஏடிஸ் கொசுக்களின் வாழ்க்கை என்பது 21 நாள்கள் மட்டுமே. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றம் காரணமாக அவை 40 நாள்கள் வரையிலும் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது.
வீடுகளிலும், பிற பகுதிகளிலும் சேகரிக்கப்படும் தெளிவான நீரில் மட்டுமே முட்டையிட்டு வந்த ஏடிஸ் கொசுக்கள் தற்போது, கிணறுகளிலும் முட்டையிடுவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டது; தற்போது, புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல, ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இவற்றால் பறக்க முடியாது என்பதால் மலைப்பிரதேசங்களில் டெங்கு பாதிப்பு இல்லாமல் இருந்தது; தற்போது மலைப் பிரதேசங்களிலும் ஏடிஸ் கொசுக்களைப் பார்க்க முடிகிறது. கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் தற்போது டெங்கு பாதிப்பு ஏற்படுவதன் மூலம்,இவற்றை உறுதி செய்ய முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பூச்சியியல் ஆய்வு அவசியம்

ஏடிஸ் கொசுக்களின் வாழ்வியல் மாற்றத்துக்கு ஏற்ப நோய்ப்பரவல் அதிகரித்து வருகிறது. வறட்சிக் காலத்தில் கூட ஏடிஸ் கொசுக்களின் முட்டைகள் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக மாறியுள்ளன. ஆனால், மருத்துவமனைகளில் முந்தைய காலங்களில் இருந்த ஏடிஸ் கொசுக்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட மருந்துகளும், உள்ளாட்சி நிர்வாகங்களில் பழைய கொசு ஒழிப்பு மருந்துகளுமே பயன்படுத்தப்படுகின்றன.
வைரஸின் தீவிரத்தை அறிந்துகொள்ள முடியாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாலேயே பல நோயாளிகள் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே, ஏடிஸ் கொசுவின் வாழ்வியல் மாற்றம் குறித்து உரிய பூச்சியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வைரஸின் தன்மைக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

தண்ணீரை முறையாக மூடி வைக்க வேண்டும்

தண்ணீரை முறையாக மூடி வைப்பதும், முடிந்தவரை கொசுக்கள் கடிக்காதவாறு தற்காத்துக் கொள்வதும் தான் டெங்குவிலிருந்து நம்மைக் காக்கும் என்கிறார், கோவை அரசு மருத்துவமனையின்இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல். அவர் மேலும் கூறியதாவது:
ஒரு கொசு முட்டையிட்டு கூட்டுப் புழுவாக மாறி கொசுவாக வெளியேற 15 நாள்கள் தேவைப்படும். நான்கு கட்ட வளர்ச்சியில் இறுதிக்கட்டத்தில் கூட கொசு உற்பத்தியாவதை ஒழித்தாலே டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வீடுகளில் சேகரிக்கப்படும் சுத்தமான நீரில் மட்டுமே இந்தக் கொசு உற்பத்தியாவதால் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீரை முறையாக மூடி வைக்க வேண்டும். முடிந்தவரை தங்களை கொசுக்கள் கடிக்காதவாறு தற்காத்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்களின் வாழ்வியல் மாற்றம் தொடர்பாக பூச்சியியல் நிபுணர்களின் ஆய்வுகள், அறிவுரைகளைக் கொண்டு கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலமும், சிகிச்சை அளிப்பதன் மூலமும் டெங்குவை ஒழித்துவிட முடியும்என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com