தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 3 எம்எல்ஏ-க்கள் எந்த அணிக்கு ஆதரவு?

எந்த அணிக்கு தங்களது ஆதரவு என்பது தொடர்பாக மூன்று எம்.எல்.ஏ.-க்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 3 எம்எல்ஏ-க்கள் எந்த அணிக்கு ஆதரவு?
Published on
Updated on
1 min read

எந்த அணிக்கு தங்களது ஆதரவு என்பது தொடர்பாக மூன்று எம்.எல்.ஏ.-க்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் தற்போது எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த பேட்டி:
தனியரசு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இணைந்தது தொண்டர்களின் விருப்பப்படி நடந்தது. ஆனால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டாம் என அவர்கள் இணைவதற்கு முன்பும், பின்பும் கூறி வருகிறோம். எனவே, டி.டி.வி தினகரனின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 23 பேரையும் அழைத்துப் பேசி அவர்களுக்கு அமைச்சரவையிலோ, கட்சியிலோ முக்கிய பொறுப்பு கொடுத்து அ.தி.மு.கவை வலிமை மிகுந்த மக்கள் பேரியக்கமாக மாற்றவேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது அதைப் பற்றி அப்போது முடிவு எடுக்கலாம் என்று பேசியுள்ளளோம். தினகரன் அதரவையும், அவருடைய எம்.எல்.ஏக்கள் 23 பேரையும் நிராகரித்துவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்று நினைப்பது நடக்காது.
அன்சாரி: அதிமுகவின் தலைவர்களாக, முதல்வராக யார் வரவேண்டும் என்பதை அ.தி.மு.க தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருப்பவர்கள் யாரும் தீர்மானிக்க முடியாது. எங்களுக்கு என தனி கட்சிகள் உள்ளன; கொள்கைகள் உள்ளன. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எங்களால் தலையிட முடியாது.
கருணாஸ்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் எனக்கு வாய்ப்பு கிடைக்க சசிகலாவே காரணம். அந்த வகையில் நான் கேட்பது 10 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து மரியாதை செய்தனர். 20 எம்.எல்.ஏ.-க்களுக்கு மேல் வைத்திருக்கும் டி.டி.வியை ஏன் ஆதரிக்க மறுக்கிறார்கள். சசிகலாவையும், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தினகரனையும் நீக்குவது தவறான முடிவு. பாஜகவின் அழுத்தத்துக்கு இந்த அரசு பலியாகி விடக்கூடாது.
முதல்வருடன் சந்திப்பு: எம்.எல்.ஏ.-க்கள் மூன்று பேரும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். பேரறிவாளனை பரோலில் விடுவதற்கு அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளுக்காக அப்போது அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com