அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை

தமிழக அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் மாற்ற வேண்டியது நமது கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை
Published on
Updated on
1 min read

தமிழக அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் மாற்ற வேண்டியது நமது கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
கோவை, ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன் அங்கு பேசியதாவது:
மக்களுக்காக உழைத்ததை அமைதியாக செய்தவர்கள் எனது ரசிகர்கள். ரத்த தானம், கண் தானம் செய்தால் மக்கள் மதிப்பார்களா என்று கேட்டவர்கள், பின்னர் அதை எங்களிடம் இருந்து கற்றுக்கொண்டனர். நீங்கள் சமுதாயத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் சிரிப்புதான் வருகிறது. தன்னிலை மறந்தவர்களுக்கும், சூழ்நிலை மறந்தவர்களுக்கும் நான் புத்தி சொல்லவோ, அவர்களிடம் வாக்குவாதம் செய்யவோ விரும்பவில்லை. அத்துடன், என்றாவது ஒருநாள் அரசியல் நமக்குப் பயன்படும் என்று நம்பியும் சேவை செய்யவில்லை. 
தமிழக அரசியலை இப்படியே விட்டு வைப்பது அவமானம். இதை மாற்ற வேண்டியது நமது கடமை. நமது பாதையில் வரும் குண்டும்குழியும், வறுமையும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். நான் கோபப்படுவது உங்களுக்காகவே என்பது புரியும். இங்கு, அரசாங்கத்தின் கஜானா எனது சொத்து. அதைத் தொடாதே என்று அரசியல்வாதிகளிடம் மக்கள் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்.
கஜானாவில் இருந்து எனக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று பங்கு கேட்டதால்தான் இன்று மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
500-க்கும், ஆயிரத்துக்கும் 5 ஆண்டுகளை விற்றுவிட்டீர்கள். உங்களது பேரப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காக களை பறிக்க வேண்டும். களை பறிக்க வேண்டியது வயலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்தான். அதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது.
நீங்கள் தலைவராக வாருங்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுப முகூர்த்த வேளையில் தொடங்குங்கள். 
இது அரசியல் பேச்சு அல்ல. என் சமூகத்துக்கான பேச்சு. போராடுங்கள். உங்களது கைகள் சுத்தமாக இருக்கட்டும். அதன்பின் நீங்கள் கேட்கலாம் மற்றவர்களின் கைகள் சுத்தமாக இருக்கிறதா என்று.
நாம் நமது வேலையை மட்டும் செய்வோம். நேரம் வரும்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம் என்றார். 
இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுட்டுரை நாயகன் என்று அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வதை வெறும் விமர்சனமாகவே பார்க்கிறேன். 
அரசியலை சுட்டுரையில் தொடங்கினால் என்ன, கோவையில் தொடங்கினால் என்ன? கோட்டையை நோக்கிப் புறப்படுவோம் என்று கூறியதை, தொழிற்சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளுக்காக கோட்டையை நோக்கிச் செல்வதாகக் கருதலாம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com