பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையன்வயலில் சிதிலமடைந்து கிடக்கும் கோபாலமடத்தின் இன்றைய தோற்றம்.
இடையன்வயலில் சிதிலமடைந்து கிடக்கும் கோபாலமடத்தின் இன்றைய தோற்றம்.
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பேராசிரியர் வள்ளி கூறியதாவது: ராமேசுவரத்துக்கு அன்றைய கால கட்டங்களில் சேது யாத்திரையாக பக்தர்கள் வந்து சென்றனர். போக்குவரத்து வசதிகளும், தங்கும் இடமும் அவ்வளவாக இல்லாத அக்காலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆங்காங்கு சத்திரங்களையும், மடங்களையும் கட்டிக் கொடுத்தனர். செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த கோபாலமடம் சுந்தரபாண்டியபட்டினத்துக்கும், தீர்த்தாண்டதானத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இம்மடத்திற்கு அருகிலேயே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயிலும் உள்ளது. சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி, பெருமாள் கோன் என்பவருக்கு தீர்த்தாண்டதானத்திற்கு வடக்கில் ஒரு மடம் கட்டிக் கொள்ள அனுமதியளித்து செப்புப் பட்டயம் கொடுத்துள்ளதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த இடையன்வயல் கோபாலமடத்தையும், ராமர் பாதம் உள்ள கோயிலையும் மீண்டும் புதிப்பித்து தர வேண்டும் என்பது பெருமாள் கோனின் 6-ஆவது தலைமுறையினராக தற்போது வசித்து வரும் பாண்டி, குமார் மற்றும் இவர்களது பெரியப்பா மகன் சந்திரன் ஆகியோரின் கோரிக்கையாகும்.


இதுகுறித்து குமார் கூறுகையில், 17 ஆம் நூற்றாண்டில் இந்த பணியினை எங்கள் முன்னோர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைக்கு செப்பேட்டில் உள்ளது போன்று எதுவும் இல்லாத நிலையில், எங்களது முன்னோர்களது பணியினை நாங்கள் தொடர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com