முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காததற்கு காரணம் இதுதான்: வித்யாசாகர் ராவ்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி சசிகலா அளித்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.
முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காததற்கு காரணம் இதுதான்: வித்யாசாகர் ராவ்
Published on
Updated on
1 min read

அதே சமயம், சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட போது, வித்யாசாகர் ராவின் முடிவை முன்பு எதிர்த்தவர்கள் கூட ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

ஆனால், உண்மையிலேயே சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்காதது ஏன்? என்பதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவே விளக்கம் அளித்தால் எப்படி இருக்கும்.

ஆம், அவரே விளக்கம் அளித்துள்ளார். தமிழ் ஊடகங்களில் அல்ல. ஆங்கில செய்தி இணையதளத்துக்கு அவர் மனம் திறந்து அளித்த பேட்டியில், தமிழக அரசியல் குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, கடந்த 45 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் நான் பல்வேறு சர்ச்சைகளையும், சம்பவங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், தமிழகத்தில் கடந்த கால நடவடிக்கைகள் போல, முந்தைய கால பணிகள் இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டதோ விமரிசிக்கப்பட்டதோ இல்லை.  

சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைப்பு விடுக்காததற்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் அப்போது உச்ச நீதிமன்றம் அளிக்கவிருந்த தீர்ப்பு ஒன்றுதான் காரணம்.

எனது முடிவுகளும், நான் எடுத்த நடவடிக்கைகளும் பலதரப்பினராலும் வரவேற்கப்பட்டது. சசிகலா மக்களால்  தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல. அதே சமயம், உச்ச நீதிமன்றம் ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துவிட்டது. அந்த சூழ்நிலையில், முடிவு எடுக்கும் முன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதே சிறந்தது என்று நினைத்தேன்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில சமயம் அவரை சென்று பார்த்தேன். ஒரு முறை மட்டும், அவர் தான் குணமடைந்து வருவதாக தனது கட்டை விரலை தூக்கிக் காண்பித்தார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து நான் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மைதான். அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோஹத்கியையும், சட்ட நிபுணர்களான சோலி சொராப்ஜியையும், கே. பராசரனையும் அணுகி சட்ட ஆலோசனை பெற்றேன். இது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளித்தேன்.

அந்த அறிக்கையில் கூறியிருந்தது குறித்து ஒரு ஆளுநர் என்ற முறையில் நான் வெளிப்படுத்த முடியாது. அதே சமயம், ஊடகங்கள் வாயிலாக எனது நடவடிக்கை குறித்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com