பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம்: மருத்துவர் அளிக்கும் முழுமையான விளக்கம்

தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் ஆங்காங்கே பரவி வருவது குறித்து பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம்: மருத்துவர் அளிக்கும் முழுமையான விளக்கம்
Published on
Updated on
3 min read


சென்னை: தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் ஆங்காங்கே பரவி வருவது குறித்து பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் எவ்வாறெல்லாம் பரவும் என்று தெரியாமலும், எந்த விதமான சிகிச்சை பெற வேண்டும், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் மக்கள் அச்சம் அடைகின்றனர்.

இந்த நிலையில், பன்றிக்காய்ச்சல் (SWINE FLU) குறித்து "அ"முதல் "ஃ"வரை Dr.A.B.ஃபரூக் அப்துல்லா என்ற பொது நல மருத்துவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதனைப் பார்க்கலாம்....

"தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. பன்றிக்காய்ச்சல் குறித்த பீதி மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது.  இந்த பதிவு பன்றிக்காய்ச்சல் குறித்த தெளிவை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி.

இந்த பன்றி காய்ச்சல் பிரபலமானது 2009 இல் இருந்து தான். அப்போது தான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. இதை swine flu pandemic 2009 என்கிறோம்.

பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது??

பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோய். இது பன்றிகளை தாக்கும் வைரஸ் கிருமியாகும்.

இந்த கிருமியானது எப்படி நமக்கு வைரஸ் சளி காய்ச்சல் வரவழைக்கிறதோ, அதே போன்று பன்றிகளுக்கு சளி காய்ச்சல் வரவழைக்கும் கிருமி.

அது எப்படி மனிதனுக்கு வந்தது??

பன்றிகளுடன் நெருக்கத்தில் இருக்கும் பன்றி வளர்ப்போர், கால்நடை ஊழியர்கள் போன்றவர்களுக்கு அரிதாக பன்றிகளின் இந்த நோய் பரவிவிட்டது. இதை zoonotic swine flu என்கிறோம்.

மனிதனுக்கு பரவியதில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த வைரஸுக்கு ஒரு வினோத சக்தி இருக்கிறது. அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மற்றொரு மூன்றாவது புதிய வைரசாக உருமாறும்.  இதை antigenic shift என்கிறோம்.

மனிதனிடமிருந்து மீண்டும் பன்றிகளுக்குள் இந்த வைரஸ் செல்லும் போது reassortment எனும் மறுதகவமைப்புக்கு உள்ளாகி புது வைரசை தோற்றுவிக்கிறது.
இப்படி புதிதாக உருவான வைரஸ்கள்

H1N1 ,H3N2 ,H2N1 ,H2N3,H1N2, H3N1 என்று விஷ்வரூபம் எடுக்கிறது .

இந்த நோயின் அறிகுறிகள் யாது?

நமக்கு மழை பனிக்காலங்களில் வரும் வைரஸ் ஜுரத்தைப் போலவே குளிர் நடுக்கம், காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, கடும் தலை வலி, உடல் சோர்வு அசதி, வாந்தி, பேதி போன்றவை ஏற்படலாம்.

இந்த நோயின் நிலைகள் யாவை??

இந்த நோய்க்கு மூன்று நிலைகள் உள்ளன

முதல் நிலை  (Category A)
மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு.

இரண்டாம் நிலை  (Category B)
கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி, குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ இந்த அறிகுறிகள் தென்படுவது.

மூன்றாம் நிலை (Category C )
முதல் மற்றும் இரண்டாம் நிலை அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலை சுற்றல், மயக்கம், மந்த நிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படுதல்

சரி.. இந்த நோய் இருப்பதை எப்படி அறிவது?

இந்த நோயின் அறிகுறிகள் தென்படின் உடனே தங்களின் குடும்ப மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை சோதித்தால் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்கலாம். இதை throat swab என்று கூறுகிறோம்.

இந்த பரிசோதனை category C நோயாளிகளுக்கு மட்டுமே அவசியம். Category A மற்றும் B நோயாளிகளுக்கு தேவையில்லை.

பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லையே. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா???

உண்டு . இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்து நம்மிடம் இருக்கிறது. இதன் பெயர் "ஒசல்டாமிவிர்" oselatamivir எனும் மாத்திரை இருக்கிறது.
ஆகவே நமக்கு அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த இன்ப்ளூயன்சா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியும் நம்மிடம் இருக்கிறது.

இந்த தடுப்பூசி வருடம் ஒருமுறை high risk group என்று சொல்லப்படும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு போடப்படுகிறது. தனியாரில் இந்த ஊசி தேவையின் பேரில் போடப்படுகிறது.

இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் அவதாரம் மாறி மாறி எடுப்பதால் வருடா வருடம் புது தடுப்பூசி போட வேண்டும்.

1918 இல் முதன்முதலில் இந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று H1N1 எனும் வைரஸ் கிருமியால் உலகம் முழுவதும் பரவி 5 முதல் 10 கோடி மக்களை காவு வாங்கியது.

மீதி உள்ள மக்களுக்கு இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி தோன்றியிருந்தது
20 ஆம் நூற்றாண்டு முழுதும் அந்த வைரஸ் மனிதர்களிடயே சாதாரண காய்ச்சலை உருவாக்கும் ஃப்ளூ வைரசாகத்தான் சுற்றி வந்தது. திடீரென கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு பின் 1998 இல் இந்த வைரஸ் மூன்று புது வைரஸ்களாக உருமாறியிருந்தது.

இதில் வருந்தத்தக்க அம்சம் யாதெனில் 1918 இல் உருவான அதே வைரஸ் தற்போது 2009 இல் உலகத்தை ஆட்டுவிக்க மறுஜென்மம் எடுத்திருப்பது தான்.

2015 இல் இந்தியாவை தாக்கிய இந்த வைரஸ், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தாக்கி 600 க்கும் அதிகமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வைரஸ் இன்றளவும் நமது நாட்டில் பரவலாக சுற்றி வருகிறது

காரணம்
நமது நாட்டின் ஜன நெருக்கடி, சுற்றுப்புறத்தூய்மையின்மை, தன்சுத்தம் பேணுவதில் இருக்கும் இடற்பாடுகள்,


எப்படி இந்த நோயில் இருந்து பாதுகாப்பாக வாழ்வது??
மிக மிக எளிது.
1.தினமும் மலம் கழித்த பின்பும் உணவு உண்ணும் முன்பும் சோப் போட்டு முறையாக கை கழுவ வேண்டும்.

2. சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கை குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

3. வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம்.

4. சளி இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

5. நம் வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்கலாம்.

6. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் முறையான மருத்துவரை அணுக வேண்டும். இது போன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம்.

பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. வீண் பீதி தேவையில்லை.

வருமுன் காப்பதே நலம்
தன்சுத்தம் பேணுவோம்
பன்றிக்காய்ச்சலை தடுப்போம்

நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா" என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com