திரையரங்குகளில் கொள்ளை... கேள்வி கேட்பாரில்லை...!

பாமரன் முதல் மெத்த படித்த மேதை வரை அனைத்துத் தரப்பினரையும் ஒரு சேர பாதிக்கக்கூடிய ஒன்று சினிமாதான். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சினிமா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை
திரையரங்குகளில் கொள்ளை... கேள்வி கேட்பாரில்லை...!
Updated on
4 min read

பாமரன் முதல் மெத்த படித்த மேதை வரை அனைத்துத் தரப்பினரையும் ஒரு சேர பாதிக்கக்கூடிய ஒன்று சினிமாதான். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சினிமா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மற்ற எந்தக் கலையாவது செய்திருக்கிறதா என்றால் இல்லை.

ஆரம்பத்தில் கலையாக கருதப்பட்ட சினிமாத்துறை, தற்போது கோடிகள் புரளும் ஒரு மாபெரும் தொழிலாக மாறி விட்டது. அதனால் இவற்றைக் கண்காணிக்க மத்தியிலும் மாநிலத்திலும் அரசமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.

தொழில்துறை எனும் போது படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள், அவற்றுக்கான விநியோகஸ்தர்கள், அவற்றைத் திரையிடும் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்குகளில் பணம் கொடுத்துப் பார்ப்பவர்கள் எல்லோருமே இதில் அடங்குவர்.

உலகிலேயே அதிகமாகத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் இந்தியா முன்னணியிலும், இந்தியாவில் தமிழகம் முன்னணியிலும் உள்ளது. மற்ற எல்லா மாநிலங்களை விடவும் அதிகமான படங்களைத் தயாரிக்கும் தமிழகத்தில்தான் சினிமாத்துறை சார்ந்த பிரச்னைகளும் அதிகமாக உள்ளன.

நியாயமாகப் பார்த்தால், அதிகப் படங்களைத் தயாரிக்கும் தமிழகத்தில் சினிமாத்துறை செழித்து மேலொங்கியிருக்க வேண்டும். இத்தனைக்கும் 1967}ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை சினிமாத்துறையிலிருந்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் நிலைமை அப்படியில்லை.

சினிமாத் தொழில் நசிந்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தற்போதைய சூழலில் டிக்கெட் கட்டணம், திருட்டு வி.சி.டி, படத்தின் மிதமிஞ்சிய தயாரிப்புச் செலவு, நடிகர்களின் சம்பளம் போன்ற காரணிகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

திரையரங்குகளில் முன்புபோல் கூட்டம் கூடாததற்குக் காரணம் அங்கு வசூலிக்கப்படும் அடவாடியான டிக்கெட் கட்டணம் என்கிற தவறான கருத்து, பரவலாகவே இருந்து வருகிறது. ஆனால், அது உண்மையல்ல.

இப்போதுள்ள சூழலில் ஒரு மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் குடும்பத்துடன் படம் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் நான்கு பேருக்கு ரூ 1,500 வரை ஆகிறது. வீட்டிலிருந்து பயணிக்கும் செலவு, பார்க்கிங் கட்டணம், டிக்கெட் கட்டணம், குறைந்த அளவு நொறுக்குத்தீனி போன்றவற்றுக்கு மட்டும் கணிசமான செலவாகிறது. டிக்கெட் ஒரு புறம் இருந்தாலும், அதற்கு சமமாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்கினுள் விற்கப்படும் குடிநீர், உணவுப் பொருள்கள் போன்றவற்றின் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திரைப்படம் பார்க்க வரும் வாடிக்கையாளர், தனது சொந்த செலவில் வெளியிலிருந்து எதுவும் வாங்கி வர அனுமதிப்பதுமில்லை. இதை எந்த நுகர்வோர் அமைப்பும் கேள்வி கேட்பதும் இல்லை.

சென்னையில் உள்ள ஐநாக்ஸ், சத்யம், ஃபாரம் மால், மாயாஜால், பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் காம்பளக்ஸில் உள்ள திரையரங்குகளில் உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றும். இதில் முக்கியமான விஷயம் வீட்டில் இருந்தோ, வெளியில் வாங்கிய உணவுப் பொருள்களையோ தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதுதான். இந்தத் தனிமனித உரிமை மீறல் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

சரி... மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில்தான் இந்த நிலை என்றால், சாதாரணத் திரையரங்கம் மற்றும் வெளியூர் திரையரங்குகில் நடக்கும் கூத்து இதை விட பயங்கரமாக உள்ளது. ரூ. 15}க்கு டிக்கெட் கொடுப்பார்கள். ஆனால் நம்மிடமிருந்து ரூ.50, ரூ.100 என வசூலித்து விடுகிறார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் நடித்த படம் என்றால் ரூ. 100 முதல் ரூ. 500 வரை அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நமக்கு தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ. 20, ரூ.25 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோதான்.

நமக்குத் தரும் அந்த ரூ.20 டிக்கெட் அடிப்படையில்தான் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தரப்படுகிறது. அதைத்தான் டி.சி.ஆர். எனப்படும் டெய்லி கலெக்ஷ்ன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள். இப்படி இருக்கும் போது ஒரு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் எப்படி தெரிய வரும். அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்களா ? விநியோகஸ்தர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறதா? என்பதெல்லாம் அந்த துறையில் உள்ளவர்களுக்கே வெளிச்சம்.

பிறகு மக்கள் என்ன செய்வார்கள். திருட்டு வி.சி.டி பக்கம்தான் செல்வார்கள். ஊரறிந்த இந்த ரகசியம் அரசுக்கு தெரியாத சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன? எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருந்து விட்டு அல்லது லாபத்தை ஒரு சாரார் மட்டுமே அனுபவித்து விட்டு சினிமாத் தொழிலில் நஷ்டம் ... நஷ்டம்... என்று புலம்பியபடியாக இருக்கிறது சினிமாத்துறை.

நல்ல படங்களைப் பார்க்க மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். திருட்டு வி.சி.டி.யால் ஒரு நல்லப் படத்துக்குக் கிடைக்கும் வசூலையோ, வரவேற்பையோ தடுத்து விட முடியாது. இதற்கு உதாரணமாக பல படங்களை கூறலாம்.

ஏன்.. இந்த ஆண்டு மாபெரும் வெற்றிப் பெற்ற பாகுபலி 2 படத்துக்கு திருட்டு வி.சி.டி வரவில்லையா. அந்தப் படத்துக்கும் இரண்டு மூன்று நாள்களில் திருட்டு வி.சி.டி. வந்து விட்டது. பிறகு எப்படி இந்தப் படம் வசூலையும், வரவேற்பையும் பெற்றது. மக்களை கவர்ந்து விட்டது. அவ்வளவுதான்.

படத்தின் தயாரிப்பு செலவு அதாவது பட்ஜெட் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அதில் பெரும் தொகை நடிகர்களின் சம்பளத்துக்கே சென்று விடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை அளிக்க அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிக குறைந்தபட்ச உத்தரவாதம் ( மினிமம் கியாரண்டி அல்லது எம்.ஜி.) கேட்கிறார். திரையரங்கு உரிமையாளர் என்ன செய்வார்... அதிக விலை கொடுத்து வாங்கிய படத்துக்கு நிர்ணயித்ததை விட அதிக கட்டணத்தைதான் வாங்குவார்.

மல்டி பிளக்ஸ் தவிர்த்த தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதற்கு தயாரிப்பாளர்களும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களும்தான் காரணமே தவிர விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கிடையாது. தயாரிப்புச் செலவு குறையும் வரை சினிமா வெற்றிகரமாக அமையாது. தொடர்ச்சியாக ஐந்து தோல்வி படங்கள் கொடுக்கும் நடிகர் அடுத்தடுத்து தன்னுடைய சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போகிறார்.

இது ஒரு வாதம் என்றால் இன்னொரு வாதமும் இருக்கிறது. எந்த வித கட்டுப்பாடோ, வரைமுறையோ இல்லாமல் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்பதால், நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கத் தொடங்குகிறார்கள். தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் என்னுடைய படத்தின் ஒரு டிக்கெட் ரூ.200}க்கு விற்கிறது என்றால் என்னுடைய மார்க்கெட்டை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அவர் தனது சம்பளத்தை அதிகரிக்கும்போது, தயாரிப்பாளர் தனது படத்தை அதிக விலைக்கு விற்கிறார். தியேட்டரில் மீண்டும் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு சுழற்சி முறையில் இது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் பாதிக்கப்படுவது சராசரி ரசிகனும், சினிமாவுக்குப் பொழுது போவதற்குச் செல்லும் சாமானியனும்தான்.

திரையரங்க உரிமையாளர்கள் சொல்லுவது என்ன? அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே டிக்கெட் கட்டணத்தை வசூலித்தால் 300 நாள்கள் ஓடினாலும் ஒரு சாதாரண நடிகரின் படம் கூட வசூலாகாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணப்படி பெறப்படும் வசூல் தியேட்டர்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவுகளுக்கே போதாது. பிறகு எப்படி தொழில் நடத்துவது?

பெரிய பட்ஜெட் படம் எனக் கூறி தங்களிடம் தயாரிப்பாளர்கள் அதிக எம்.ஜி.கேட்கிறார்கள். போட்ட பணத்தை எடுக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்பது அவர்கள் தரப்பு வாதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீயின் விலை ரூ. 5 என்றால், இப்போது ரூ.10 வரை விலை உயர்ந்திருக்கிறது. விலைவாசி காரணமாக எல்லா கட்டணங்களும் உயர்ந்துக் கொண்டே இருக்கும் போது, தியேட்டர் கட்டணத்தை மட்டும் குறையுங்கள் என்றால் என்ன நியாயம் என்பது தியேட்டர்காரர்களின் வாதம்.

இங்கு எல்லா மட்டங்களிலும் தவறு நடந்துக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றால் அது தங்களுடையது என்று கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் அதற்கு மற்றவர்களைக் காரணம் காட்டிப் பழி போடுவதும் மற்ற துறைகளை விட சினிமாத்துறையில் அதிகம். ஒரு சினிமா உருவாகக் காரணமாக இருக்கும் காரணிகளைப் பற்றி ஒரு ரசிகனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது அவனுக்கு அது தேவையில்லாமலும் இருக்கலாம். ஆனால் அவன் கண் முன் தெரிவது டிக்கெட் கட்டணம் மட்டும்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு தியேட்டர்காரர்களை மட்டும் குறை சொல்வதிலும் நியாயமில்லை. தியேட்டர்காரர்களின் கோரிக்கையின் படி அரசு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும். முறைப்படுத்த வேண்டும். தியேட்டர்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பவே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆரம்பம் முதல் எம்.ஜி.ஆர்., சிவாஜி வரை ரஜினி, கமலின் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம் வரை இந்த நடைமுறைதான் இருந்து வந்தது. அதனால்தான் படங்களும் 100 நாள்கள், 175 நாள்கள் என ஒடின. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் என முத்தரப்பினரும் லாபமடைந்தனர். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது இந்த நிலை மாறி விட்டது.

ஒரு தியேட்டரில் யாருடைய படத்தைத் திரையிட்டாலும், திரையரங்கின் கட்டமைப்பு வசதிக்கு ஏற்பத்தான் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தை வைத்துக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. அப்போதுதான் திறமையுள்ள புதியவர்கள் திரைத்துறையில் ஈடுபட முடியும். 1964}ஆம் ஆண்டு செப்டம்பர் 25}ஆம் தேதி எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸின் தொழிலாளி, இயக்குநர் ஸ்ரீதரின் கலைக்கோயில் போன்ற திரைப்படங்களுக்கு நடுவில், ஒரே ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்ட படம் வீணை எஸ்.பாலச்சந்தரின் பொம்மை. ஆனால், பொம்மை திரைப்படம் 100 நாள்கள் ஓடி சாதனை புரிந்தது. அதற்கு காரணம் தியேட்டர் கட்டணம். சின்ன படம், பெரிய படம் என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தால்தான் நல்ல படம் ஓடும். வசூல் சாதனை புரியும். எம்.ஜி.ஆரே நடித்திருந்தாலும் படம் நன்றாக இல்லாவிட்டால் ஓடாது. இன்று அதுவா நிலைமை?

கேள்வி கேட்பாரில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதால்தான், தமிழ்த் திரையுலகம் நல்ல திரைப்படங்களை எடுக்கவோ, தரமான சினிமாத் தயாரிப்பதன் மூலம் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தடம் பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்ட தமிழ்த் திரையுலகம் தரமில்லாத மசாலாப் பட உலகமாக திகழ்வதன் காரணம், வரைமுறை இல்லாமல் இருக்கும் தியேட்டர் கட்டணக் கொள்கைதான்.

எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றி, அவர் முதல்வராக இருந்த வரை தியேட்டர் கட்டணத்தை கட்டுக்குள் வைத்திருந்ததுதான். அவர் இருந்த காலத்திலேயே விடியோ கேசட்டுகள் வந்து விட்டிருந்தன. அப்படி இருந்தும், மதுர கீதம், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், மூன்றாம் பிறை என்று பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. புதிய பல இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைர்களும் திரையுலகில் அடியெடுத்து வைக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் தியேட்டர் கட்டணம் சீராக இருப்பதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்தியதுதான்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிட வில்லை. தியேட்டர் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டால், தமிழ்த் திரையுலகம் தலை நிமிர்ந்து விடும். பூனைக்கு மணி கட்டப் போவது யார்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com