

ராமேசுவரம்: தமிழக மக்கள் அனைவரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும், ஜெயலலிதாவுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கலாம் மணிமண்டபத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை திறந்து வைத்தார். மணிமண்டபத்தை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி, அப்துல்கலாமின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த மணிமண்டபத் திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடு உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவின் காரணமாக ராமேசுவரம் தீவு விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழில் நண்பர்களே என்று பேசி தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி பேசிய விபரங்கள் பின்வருமாறு:
புண்ணிய பூமியான ராமேசுவரத்திற்கு இன்று வந்திருப்பதற்கு பெருமைப்படுகிறேன். அதுவும் மறைந்த ஜனாதிபதி கலாம் அவர்களின் நினைவு தினத்தில் இங்கு இருப்பதனை மிகவும் பெருமையாக உணர்கிறேன்.இந்த மண்ணை மிதிப்பதனை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.
ராமேசுவரம் வெறுமனே ஒரு மதத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு இடமல்ல. நாட்டு மக்கள் அனைருக்குமான ஒரு ஆன்மீக வழிகாட்டியாகவும் அது திகழ்கிறது.
இந்தியாவின் மகத்தான தலைவர் விவேகானந்தர் 1897-ஆம் ஆண்டு தன்னுடைய சிகாகோ பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பியவுடன் கால்பதித்த புண்ணிய பூமியிது. அத்தகைய இடத்தில் கலாம் அவர்கள் பிறப்பின் காரணமாக இது இன்னமும் கூடுதல் பெருமை கொள்கிறது.
கலாம் அவர்கள் மரணத்தின் பொழுது உங்கள் அனைவருக்கும் இங்கு ஒரு மணி மண்டபம் கட்டப்படும் என்று நான் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதன்படி நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமானது மிக குறுகிய காலத்தில் இந்த மணிமண்டபத்தினை கட்டி முடித்திருக்கிறது. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த பணிகளுக்காக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரின் சீரிய முயற்சியின் காரணமாக நினைத்ததனை விட விரைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
மத்தியில் அமைந்துள்ள இந்த அரசானது காலத்தினை மாற்றும் ஒரு அரசாக அமைந்துள்ளது. மக்களின் வளர்ச்சியொன்றினையே நோக்கமாக கொண்டு உழைக்கும் அரசாக இது அமைந்துள்ளது, மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் இருப்பதே இதற்கு காரணமாகும்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழைப்பாளர்கள் சோர்வறியாமல் உழைத்து இந்த மண்டபத்தினை உருவாக்கியுள்ளார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதற்காக பெருமைப்பட்டிருப்பார். தொழிலாளர்களையும் பாராட்டியிருப்பார்.
ராமேசுவரத்திற்கு புனிதப் பயணம் வரும் யாத்ரீகர்கள் இனி கலாம் நினைவிடத்திற்கு வருகை தருவதையும் தங்கள் பயணத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இங்கு நமது மீனவர்கள் அனுபவிக்கும் சிரமங்களினை போக்கும் வகையில், ஆழ்கடலில் மீன் பிடிக்கும் படகுகளை வழங்கும் 'நீலப் புரட்சி' திட்டமானது இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
ராமன் வாழ்வோடு தொடர்புடைய இரண்டு முக்கிய இடங்களான ராமேசுவரம் மற்றும் அயோத்தி ஆகிய இரண்டையும் தொடர்பு படுத்தும் ரயில்சேவையை இன்று துவங்கி வைப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்த ரயிலில் சுற்றுச் சூழலினை காக்கும் வகையில் 'பசுமைக் கழிவறை' செய்லபடுத்தப்பட உள்ளது.
அத்துடன் விவேகானந்தா கேந்திர அமைப்பின் மூலம் பசுமை வீடுகள் அமைக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.
நமது நாட்டிலே 7500 கிமீ நீள கடற்கரை அமைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி கடல்வழி போக்குவரத்து மற்றும் சரக்கு பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
கலாம் தனது வாழ்வில் மிகவும் விரும்பியது இளைஞர்களைத்தான். அவர்களுக்காக நமது அரசு 'ஸ்டார்ட் அப் இந்தியா-ஸ்டான்ட் அப் இந்தியா','மேக் இந்த இந்தியா' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் 'முத்ரா' திட்டத்தின் மூலமாக பல இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களின் மூலமாக தொழில் துவங்க தமிழகத்தினை சேர்ந்த ஒரு கோடி பேர் முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்திற்கு சென்னை,மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 'அம்ருத்' திட்டத்தின் மூலம் 33 நகரங்களின் மேம்பாட்டிற்கு என ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதே போல ஊரகப் பகுதி இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என மூன்று ஆண்டுகளில் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசிடம் இருந்து 8 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கான ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. அது பற்றி விரைந்து முடிவெடுத்து அறிவிப்போம். இவற்றின் மூலமாக தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லுமென்பது உறுதியான ஒன்றாகும்.
நாடு விரைவில் தனது 75-ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாட உள்ளது. இந்தத் தருணத்தில் வளர்ச்சியடைந்த, முன்னேற்றம் அடைந்த இந்தியா என்ற ஒன்றினை உருவாக்கி அளிப்பதே கலாமுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.
அதே நேரம் ராமர் இலங்கைக்கு ராம்சேது பாலம் கட்டும் பொழுது அணில் எவ்வாறு தன்னால் ஆன சிறிய உதவியினை செய்ததோ, அதேபோல நாமனைவரும் வளர்ச்சியினை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைத்தால், அது 120 கோடி பேரின் மாபெரும் முன்னேற்றமாக இருக்கும்.
இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும், ஜெயலலிதாவுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இவ்வாறு மோடி தனது உரையில் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.