சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது? உரிமையாளர் விளக்கம்

சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது? உரிமையாளர் விளக்கம்
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

தீபாவளிக்குள் புதிய கட்டடம்
சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம். இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.

தரைகீழ் தண்ணீர் தொட்டியினால் சிக்கல்
சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமாதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

தீ விபத்தினால் சிதைந்து நிற்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் வியாழக்கிழமை நண்பகலே தொடங்கப்பட்டன. கட்டடத்தின் பின்பகுதியில் இருந்து இடிக்கும் பணியை தொடங்க திட்டமிட்ட அதிகாரிகள், அங்கு தரைத்தளம் முழுவதும் மணல் பகுதியே என நினைத்திருந்தனர்.

ஆனால், பின்பகுதி முழுவதும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டி இருப்பது தெரியவந்தது. இந்த தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்தப் பணியின் காரணமாக, கட்டடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.

25 அடிக்கு மணல்மேடு: அதேபோல் முதலில், கட்டடத்தை இடிக்கும் ஜாக் கட்டர் கிரேனை நிறுத்துவதற்காக, சுமார் 15 அடி உயரத்தில் கட்டட கழிவுகளை கொண்ட மணல்மேடு உருவாக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து ஜாக் கட்டர் இயந்திரத்தால் 6- ஆவது தளத்தை இடிக்க முடியாததால், மேலும் 10 அடிக்கு மணல்மேடு உயர்த்தப்பட்டு, நண்பகல் 2.10 மணியளவில் பணி தொடங்கப்பட்டது.

கட்டடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது. இதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. பெற்றிருந்ததது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.

75 தொழிநுட்பப் பணியாளர்கள்: கட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, காவல் இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமையில் 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊழியர்கள்: நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.

பாதுகாப்பு பெட்டகம்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து, கட்டட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.

மேலும், கட்டடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தூசு நகரான தி.நகர்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டட தூசு வெளியேறியது. இந்த தூசு உஸ்மான் சாலை, பிஞ்சால சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ரங்கன் தெரு உள்ளிட்ட அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

மருத்துவ முகாம்கள்: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com