பிரீமியம் தத்கல்: காலை ஒரு கட்டணம், மாலை ஒரு கட்டணம்

தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து முக்கிய ரயில்களிலும் பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
பிரீமியம் தத்கல்: காலை ஒரு கட்டணம், மாலை ஒரு கட்டணம்
Published on
Updated on
3 min read

தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து முக்கிய ரயில்களிலும் பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் டைனமிக் கட்டணம் ஒன்றைப் புகுத்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது ரயில்வே நிர்வாகம். இது ரயில் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 133 ரயில்களில் பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 800-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த முறை எல்லாமே வட மாநிலங்களில் செயல்பாட்டுக்கு முதலில் கொண்டு வரப்பட்டன.
ஆனால், இப்போது தெற்கு ரயில்வேயில் 99 சதவித ரயில்களில் பிரீமியம் தத்கல் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பதிவு பயணச் சீட்டுகளில் தரகர்கள் தலையீட்டைத் தவிர்க்கும் வகையில் பிரீமியம் தத்கல் பயணச் சீட்டுகளை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. 4 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், பயணத் தேதிக்கு முந்தைய நாள் பயணச் சீóட்டை எடுக்கும் வகையில் தத்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கடும் போட்டி இருப்பதால், தரகர்களின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் பயணிகளே, கூடுதல் தொகையை ரயில்வேயிடம் நேரடியாக அளிக்கும் பிரீமியம் தத்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ரயிலில் மொத்த முன்பதிவு இருக்கைகளில் 30 சதவீதம் தத்கலுக்கு ஒதுக்கப்படும். அதில் பாதி இருக்கைகள் பிரீமியம் தட்கல் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து கோவைக்கு பிரீமியம் தத்கல் மூலம் பயண நாள் அன்றே படுக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்தால் அதற்குக் கட்டணமாக ரூ.955 வசூலிக்கப்படுகிறது. இதே சாதாரண தத்கலில் ரூ.415, சாதாரண முன்பதிவு பயணச் சீட்டின் விலை ரூ.315 ஆக உள்ளது.
டைனமிக் கட்டணம்: பிரீமியம் தத்கலில் டைனமிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி மொத்த இருக்கைகளில் 10 சதவீத இருக்கைகள் சாதாரண கட்டணத்தைவிட 10 சதவீதம் கூடுதல் கட்டணத்திலும், அதையடுத்து 10 சதவீத இருக்கைகளுக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்திலும் பிரீமியம் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
அதைத்தொடர்ந்து 40 சதவீதம், 80 சதவீதம், 200 சதவீதம் என படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு டிக்கெட்டுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இரண்டடுக்கு ஏ.சி, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு சாதாரண கட்டணத்தைவிட 150 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இணையதளத்தில் மட்டுமே பிரீமியம் பயணச்சீட்டைப் பெற முடியும். ரயிலைத் தவறவிட்டு விட்டால் பணம் திரும்பப் பெற முடியாது என்பதும் சாதாரண பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்ட ரயில்களிலும்...: நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் தத்கல் பயணச் சீட்டுகளில் பாதி பிரீமியம் தத்கல் பயணச் சீட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் பொதிகை விரைவு ரயிலில் இத்திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டபோது, பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனாலும் தொடர்ந்து பல்வேறு அதிவிரைவு ரயில்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நெல்லை மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் திங்கள்கிழமை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முத்துநகர் விரைவில் மொத்தம் 264 பயணச் சீட்டுகள் தத்கலுக்கு ஒதுக்கப்படும். அதில் பாதி 132 டிக்கெட்டுகள் பிரீமியம் தட்கலுக்கு மாற்றப்பட்டுள்ளன. நெல்லை விரைவு ரயிலிலும் இதை நிலைதான்.


பிரீமியம் தத்கல் விலை நிலவரம் !

சென்னை சென்ட்ரல் - கோவை (சேரன் விரைவு ரயில்)

படுக்கை வசதி ரூ.955
மூன்றாம் வகுப்பு ஏசி ரூ.2,775
இரண்டாம் வகுப்ப ஏசி ரூ.4,480


சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (நெல்லை விரைவு)

படுக்கை வசதி ரூ.1,000
மூன்றாம் வகுப்பு ஏசி ரூ.1,810


பயணச் சீட்டு கட்டணம் பிரீமியம் தத்கலில் எப்படி பிரிக்கப்படுகிறது?

படுக்கை வசதிக்கு

அடிப்படை கட்டணம் ரூ. 261
முன்பதிவு கட்டணம் ரூ. 20
அதிவிரைவு கட்டணம் ரூ. 30
டைனமிக் கட்டணம் ரூ. 642
மொத்தம் ரூ. 955

அடிப்படை கட்டணம் ரூ. 332
முன்பதிவு கட்டணம் ரூ. 20
அதிவிரைவு கட்டணம் ரூ. 30
டைனமிக் கட்டணம் ரூ. 618
மொத்தம் ரூ.1,000

ரயில்வே சங்கங்கள் அதிருப்தி

பிரீமியம் தத்கல் பயணச் சீட்டு நடைமுறை குறித்து தெற்கு ரயில்வேயின் முக்கிய சங்கங்களின் கருத்து:
மறைமுக வசூல்
தமிழ்நாடு தென் மாவட்ட ரயில் பயணியர் சங்க பொதுச் செயலாளர் சூசை ராஜ்: தேவையான ரயில்களை இயக்குவதை விட்டுவிட்டு, பிரீமியம் தத்கல் மூலம் மக்களிடம் மறைமுகமாகக் கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். இப்போது அரசு நிறுவனமான ரயில்வே துறை தனியார் பஸ்களைப் போல இயங்கத் தொடங்கிவிட்டது. இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் மறு பரீசிலனை செய்ய வேண்டும்.
முன்னறிவிப்பின்றி அறிமுகப்படுத்தியது தவறு
தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்க (எஸ்.ஆர்.எம்.யூ) உதவி பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வர் லால்: பிரீமியம் தத்கல் நடைமுறையை முன்னறிவிப்பின்றி கொண்டு வந்து இருக்கக் கூடாது. திடீரென இம்முறையைக் கொண்டு வந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன் இப்படியொரு அதிரடியான கட்டணத்தைப் பயணிகள் சந்தித்ததில்லை. ரயில்வே நஷ்டத்தில் இயங்குவது உண்மைதான். ஆனால் அதற்காக பயணிகள் மீது பெரும் சுமையை சுமத்தக் கூடாது.

நஷ்டத்தை மக்கள் மீது சுமத்துவதா?

தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க (டி.ஆர்.ஈ.யூ) செயல் தலைவர் இளங்கோவன்: விரைவு ரயில்கள் இயக்குவதில் ஒரு நபருக்கு ரயில்வேக்கு ரூ.100 செலவாகிறது. ஆனால், பயணச் சீட்டு மூலம் மக்களிடம் ரூ.53 வசூல் செய்யப்படுகிறது. மீதமுள்ள நஷ்டத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். ஆனால், சரக்கு ரயிலில் ரூ.100 செலவாகிறது என்றால் ரூ.163 வசூல் செய்யப்பட்டுச் சரி செய்யப்படுகிறது. மத்திய அரசு ரயில்வேக்கு மானியம் வழங்கத் தயங்குவதுதான் பிரச்னை. இதனால் ரயில்வே தனது நஷ்டத்தை ஈடுகட்ட பிரீமியம் தத்கல் போன்ற திட்டங்களை மக்கள் மீது சுமத்தி வசூல் வேட்டை நடத்துவதுதான். இது முழுக்க முழுக்கக் தவறான நடவடிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com