ரூ.10 கோடி வாங்கினேனா? எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உருக்கமான பதிவு!

மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சசிகலா அணியினர் எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக வெளியான தகவலை வன்மையாகக் கண்டிக்கின்றேன், மறுக்கின்றேன் என்று தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.
ரூ.10 கோடி வாங்கினேனா? எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உருக்கமான பதிவு!
Updated on
1 min read


சென்னை: மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சசிகலா அணியினர் எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக வெளியான தகவலை வன்மையாகக் கண்டிக்கின்றேன், மறுக்கின்றேன் என்று தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் சரவணன் எம்எல்ஏ அவர்கள் பல அதிமுக எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறியுள்ளதாகவும், அதில் எனக்கு 10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் கூவத்தூர் முகாமுக்குப் போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்துக்கு வந்த போது கரன்ஸி பாலிடிக்ஸ் எங்களுக்கு பிடிக்காது என்பதை கூறினோம். அவரும் எங்களைப் பற்றி முழுமையாக தெரிந்தவர் என்பதால் சிரித்துக் கொண்டே அதை ஆமோதித்தார். எங்களிடம் நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.

உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம்.  அப்போது அதைத் தவிர நாங்கள் எதுவும் பேசவில்லை. பேரத்திலும் ஈடுபடவில்லை. 

ஆனால், ஆங்கில செய்தி ஊடகத்தில் வெளியான செய்தி மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இதற்கு பின்னணி என்ன என்பது டெல்லியை கவனிப்பவர்களுக்கு புரியும்.

சரவணன் எம்எல்ஏவின் குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். இது தொடர்பாக மஜக சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com