தமிழக அரசு ஆதரவுடன் நியூட்ரினோ ஆய்வு தொடரும்: இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள் நம்பிக்கை

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தேக்கம் அடைந்துள்ள நியூட்ரினோ ஆய்வு, மாநில அரசின் முழு ஆதரவுடன் விரைவில் தொடங்கும் என்று இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள் நம்பிக்கை
பயிலரங்கில் திங்கள்கிழமை பேசும் (இடமிருந்து) மையத்தின் உயிரி அறிவியல் குழும இயக்குநர் சத்தோபாத்யாய், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத் தலைவர் எஸ்.ஏ. பரத்வாஜ்
பயிலரங்கில் திங்கள்கிழமை பேசும் (இடமிருந்து) மையத்தின் உயிரி அறிவியல் குழும இயக்குநர் சத்தோபாத்யாய், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத் தலைவர் எஸ்.ஏ. பரத்வாஜ்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தேக்கம் அடைந்துள்ள நியூட்ரினோ ஆய்வு, மாநில அரசின் முழு ஆதரவுடன் விரைவில் தொடங்கும் என்று இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்திய அணுசக்தித் துறையின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையமும் தேசிய பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து மும்பையில் கடந்த இரண்டாம் தேதி முதல் நடத்திய அறிவியல் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப் பயிலரங்கு திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத் தலைவர் எஸ்.ஏ.பரத்வாஜ், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய உயிரி அறிவியல் குழும இயக்குநர் சத்தோபாத்யாய், பாபா ரேடியோ ஐசோடோப் தொழில்நுட்பத் தலைமைச் செயல் அதிகாரி கணேஷ், டாடா நினைவு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சித்தார்த் லஷ்கர், இந்திய அணுசக்தித் துறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அணுசக்தித் துறையின் பணி, அணுமின் உற்பத்தி, அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பயன்கள், அவை தொடர்பான சந்தேகங்கள் ஆகியவை குறித்து பயிலரங்கில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் பதிலளித்தனர்.
அப்போது, தேனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் ஆட்சேபம் குறித்து மூத்த விஞ்ஞானியும் ஏஇஆர்பி தலைவருமான பரத்வாஜிடம் கேட்டதற்கு, ’இந்த விவகாரம் அணுசக்தி ஒழுங்குமுறை வரம்புக்குள் வரவில்லை என்றாலும், திட்டம் பற்றி தவறாகப் புரிந்து கொண்டு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். அவை விரைவில் களையும் என நம்புகிறேன்' என்று கூறினார்.
இதையடுத்து, நியூட்ரினோ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தினமணி நிருபர் கேட்டதற்கு மூத்த விஞ்ஞானிகள் அளித்த பதில்: நியூட்ரினோ திட்ட ஆய்வின் போது சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வளங்கள், உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இத்திட்டம் தொடர்பாக மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கூடங்குளம் அணுமின் திட்டம் குறித்து ஒருதரப்பினர் பிரச்னையை எழுப்பினர். அவர்களின் சந்தேகங்களையும் பொதுமக்களிடையே நிலவிய அச்சத்தையும் களைந்து பின்னர் கூடங்குளத்தில் மின் உற்பத்தித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இரண்டாவது அணு உலை, நிர்ணயித்த மின்சார உற்பத்தி அளவை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதுபோலவே, தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ திட்ட ஆய்வு மீது மக்களுக்கு உள்ள சந்தேகங்கள் களையப்பட்டு அத்திட்ட ஆய்வு, மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படும் என நம்புகிறோம். விரைவில் இது தொடர்பாக தமிழகத்துக்குச் சென்று மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?: உலகம் முழுவதும் நியூட்ரினோ (அணுத்துகள்) சக்தி பரவி உள்ளது. சுமார் நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. இந்த அணுத் துகளை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.
இதேபோல, இந்தியாவில் முதல் முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965-இல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அச்சுரங்கங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. எனவே, இந்த ஆராய்ச்சியை மீண்டும் நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியல் கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ. கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தொலைவுக்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து, பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 டன் எடையுள்ள இரும்பினாலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ. பரிமாணமுள்ள பாறை இருந்தால்தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால்தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகுதான், நியூட்ரினோவை காண முடியும். முதல்கட்டமாக ஐ.என்.ஓ. கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com