நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜூக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவரை நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
Updated on
1 min read

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜூக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவரை நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 196-ஆவது வார்டு மாநகர் மன்ற உறுப்பினர் அண்ணாமலைக்கு, 12 இடங்களில் சொத்துகள் உள்ளன. இவற்றுக்கு ரூ.55, ரூ.110 என்ற அளவில் மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
ஆகையால், சம்பந்தப்பட்ட மாநகர்மன்ற உறுப்பினரின் சொத்துகளுக்கு நிர்ணயித்த சொத்து வரிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.தங்கவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மாநகர்மன்ற உறுப்பினர் சொத்துகள் பற்றிய அறிவிப்பில், தனக்கு சொத்துகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது அவரின் சொத்து விவரங்களை பார்த்தால் அதிர்ச்சியளிக்கிறது.
ஆகையால், இந்த வழக்கை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு மாநகர காவல் துறை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதங்கள் ஆகியும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என்று மனுதாரர் பொன்.தங்கவேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது: உயர் அதிகாரிகளே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அவர்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவர் என, எப்படி எதிர்பார்க்க முடியும் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மாநகர காவல் ஆணையர் எப்போது ஆஜராவார்? என்பதை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞருக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என்றார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவற்றை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசு வழக்குரைஞர்களான உங்களது வேலை. நீதிமன்றம் என்பது பாவப்பட்ட இடமல்ல.
இங்கு ஆஜராவது பாவச் செயலா? அவ்வாறு ஆஜராவது என்ன கௌரவப் பிரச்னையா?
நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தாததால், அரசு வழக்குரைஞர்கள்தான் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்றார்.
இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறோம் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் என்றால் சம்பந்தப்பட்ட நபர் நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும். அதற்கு அவருக்கு வசதியான நாள் எது என்றுதான் கேட்டேன்.
இந்த வழக்குக்கு தலைமை வழக்குரைஞர் என அனைவரும் ஆஜராகியுள்ளீர்கள். இதைவிட முக்கியமான பிரச்னைகள் தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆணையர் நேரில் ஆஜராவதை கௌரவப் பிரச்னையாக கருத தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com