நான்தான் ஜெயலலிதாவின் மகன்: உயர் நீதிமன்றத்தை பரபரப்பாக்கிய வாலிபர்! 

நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்று உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்த  வாலிபரால் பரபரப்பு உண்டானது.
நான்தான் ஜெயலலிதாவின் மகன்: உயர் நீதிமன்றத்தை பரபரப்பாக்கிய வாலிபர்! 
Published on
Updated on
1 min read

சென்னை: நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்று உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்த  வாலிபரால் பரபரப்பு உண்டானது.

ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தான் மறைந்த  முதல்வர் ஜெயலலதாவுக்கும், மறைந்த தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் என்றும்,தன்னை அப்பொழுது எம்.ஜி.ராமசந்திரன் இல்லத்தில் வேலை பார்த்த வசந்தாமணி என்பவரது குடும்பத்திற்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமந்திரனை சாட்சியாக வைத்து தத்து கொடுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு சாட்சியாக அவர் ஒரு தத்து பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதில் எம்.ஜி.ராமந்திரன் கையெழுத்திட்டிருந்ததாக அவர் கூறினார். மேலும் சில புகைப்படங்களையும் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்திருந்தார். அத்துடன் தற்போது தனக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மூலம் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், தான்தான் உண்மையான வாரிசு என்பதை அறிவித்து ஜெயலலதாவின் சொத்துக்களைப் பெற உதவ வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கத் தக்கதா என்பது குறித்த அடிப்படை விசாரணை நீதிபதி மஹாதேவன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

அப்பொழுது நீதிபதி மஹாதேவன் கூறியதாவது:

நீங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயார் செய்யப்பட்டவை. ஒரு எல்.கே.ஜி மாணவனிடம் கொடுத்தால் அவனே இவை போலி என்று கண்டுபிடித்து விடுவான். பொதுவெளியில் எளிதாக கிடைக்கக் கூடிய புகைப்படங்களை எல்லாம் ஆதாரங்களாக சமர்ப்பித்துளீர்கள். இதை எல்லாம் வைத்துக் கொண்டு யார் வேண்டுமாலும் பொது நல வழக்கு போடலாம் என்று நினைக்கிறீர்களா? நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள் . மேலும் நீங்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கையெழுத்திட்டதாக கூறியுள்ள காலகட்டத்தில் அவர் கைகளை அசைக்க முடியாத நிலையில் உடல்நலம் குன்றியிருந்தார் என்பனதுதான் வரலாறு. இப்பொழுதே காவல்துறையினரை அழைத்து உங்களை நான் சிறைக்கு அனுப்ப முடியும். 

இவ்வாறு கடுமையாக கருத்து தெரிவித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை நாளை அவர் வசமுள்ள ஆவணங்களை சென்னை காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் உண்மைத்தன்மையை சோதனை செய்து ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

அப்பொழுது மனுதாரர் கிருஷ்ணமூர்த்திக்கு உதவியாக அங்கு இருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியையும்  நீதிபதி மஹாதேவன் கடிந்து கொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com