திமுக உறுப்பினர் உதயசூரியனின் பெயரைக் குறிப்பிடாமல் ’ரைசிங் சன்' என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் (சங்கராபுரம்) பேசியது:
பேரவைத் தலைவரே, உறுப்பினர்கள் பேசும்போது அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது; பேச்சை நிறுத்துங்கள் என்று அவ்வப்போது குறுக்கீடு செய்வீர்கள். அதைப்போல், உதயசூரியன் என்ற பெயரைக் குறிப்பிட்டு அவ்வப்போது குறுக்கீடு செய்யாதீர்கள்; இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரம் வேறு.
ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது திமுக உறுப்பினர்கள் ஏன் மேஜையைத் தட்டினார்கள் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால், என் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதால் உங்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படக்கூடாது. எனவே, நான் பேசும்போது குறுக்கீடு செய்யாதீர்கள் என்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோதெல்லாம் உதயசூரியனின் பெயரைக் குறிப்பிடாமல், மாண்புமிகு உறுப்பினர் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
ஆனால், திமுக உறுப்பினர்கள் உதயசூரியனின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுமாறு தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் உதயசூரியன் எனக் குறிப்பிடாமல் ’ரைசிங்சன்' என்றார். அவரது இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.