
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க உடனடியாக மத்திய தேர்தல் பார்வையாளரையும், மத்திய பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் தலைமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி, மைத்ரேயனுடன் தமிழக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். இக்குழுவினர் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை அவரது அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் டாக்டர் வா.மைத்ரேயன் கூறியது: 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' அணியைச் சேர்ந்த நாங்கள், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடைபெற்று வரும் நடத்தை விதி மீறல், பணப் பட்டுவாடா, வாக்காளர்களுக்குப் பணம் அளித்தல் போன்ற செயல்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விளக்கினோம்.
புகார்கள் என்ன?: இந்த இடைத் தேர்தலில் சசிகலா தலைமையில் செயல்பட்டு வரும் 'அதிமுக - அம்மா' அணியைச் சேர்ந்த ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தற்போது ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சேர்ந்தவர். இதனால், அவருக்கு சாதகமாக மாநில அரசுத் துறைகளின் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால், இடைத் தேர்தல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, எந்தக் காரணத்தை கொண்டும் மாநில அரசு அதிகாரிகளை இடைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் மாநில அலுவலர்கள் யாரையும் வாக்குச்சாவடிக்குள் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக மத்திய தேர்தல் பார்வையாளர், மத்திய அரசு அலுவலர்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு சாதகமாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே ஈடுபட்டுள்ளார். எனவே, அவரது கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல் துறை, டி.டி.வி.தினகரனுக்கு சாதகமாகச் செயல்படுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினரை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அனுப்பி வைத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
விடியோ ஆதாரம் தாக்கல்: வாக்காளர்களைக் கவரும் வகையில் பணம், பரிசுப் பொருள்களை டி.டி.வி. தினகரன் அணியினர் வழங்கி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விடியோ, புகைப்பட ஆதாரங்களை தேர்தல் ஆணையர்களிடம் அளித்துள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதியின் ஒட்டுமொத்த இடைத் தேர்தல் பணிகளைக் கண்காணித்து மேற்பார்வையிட தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கைகளை தீவிர கவனத்துடன் கேட்டறிந்த தலைமைத் தேர்தல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார் மைத்ரேயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.