
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் இளநீர், பழச்சாறுகள் விற்பனை அதிகரித்துள்ளன. அதேநேரத்தில், பன்னாட்டு குளிர்பானத்தின் விற்பனை 48 சதவீதம் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுக்கிறது. வேலூர் உள்பட சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. வெயிலின் தாக்கம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவதற்கு, உடல் உஷ்ணத்தை குறைக்கும் இளநீர், பலவிதமான பழச்சாறுகள், கூழ், கரும்புச் சாறு போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி அருந்துவதால், இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் விரும்பும் இளநீர்: உடல் உஷ்ணத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இளநீருக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மலைபோல இளநீர் காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இளநீர் காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு இளநீரின் விலை ரூ.30 முதல் ரூ.45 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இதன் விலை உயர்ந்திருந்தாலும் மக்கள் விரும்பிப் பருகுகின்றனர்.
தாகம் தீர்க்கும் தர்பூசணி: தாகத்தைத் தீர்ப்பதில் பெரும் பங்காற்றும் தர்பூசணியின் விற்பனையுமம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல துண்டுகளாக வெட்டியும், முழு தர்பூசணியாகவும் விற்கப்படுகிறது. ஒரு துண்டு தர்பூசணி ரூ.6 முதல் ரூ.10-க்கும், முழு தர்பூசணி ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், தர்பூசணி விலை குறைந்துள்ளது.
திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 20 டன் வரை தர்பூசணி கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன் ரூ. 8 ஆயிரமாக இருந்தது, போது, ரூ.5 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்றார் தர்பூசணி மொத்த வியாபாரி கே.குப்புசாமி.
கம்பு -கேழ்வரகு -சோளம் கூழ்: உடலுக்கு ஆரோக்கியமான, குளிர்ச்சியான கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து 20 ஆண்டுகளாக கூழ் விற்பனை செய்யும் வெள்ளிக்கண்ணு கூறுகையில், ஒரு சொம்பு கூழ் ரூ.20. கம்பு-கேழ்வரகு-சோளம் ஆகியவற்றைக் கலந்து, அரைத்து தயார் செய்து கொடுக்கிறோம். கோடைக் காலத்தில் இதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்றார்.
பழச்சாறு: சென்னையில் பல பெயர்களில் பழச்சாறு கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நிரம்பி வழிகிறது. சாத்துக்குடி, தர்பூசணி, மாதுளை, சப்போட்டா ஆகிய பழச்சாறுகளை அதிகமானோர் விரும்புகின்றனர். முன்பு, ஒரு நாளைக்கு சராசரியாக 200 பேர் முதல் 300 பேர் வருவார்கள். தற்போது 300 முதல் 450 பேர் வருகின்றனர். பழங்கள் மற்றும் பழச்சாறுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார் பழச்சாறு கடைக்காரர் சரவணன்.
குளிர்பான விற்பனை சரிவு: பன்னாட்டு குளிர்பானங்களை அதிகம் பருகுவோர் அதைத் தவிர்த்து இளநீர், பழச்சாறு ஆகியவற்றை பருகத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியது:
தமிழகத்தில் மொத்தம் 6 லட்சம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில் பன்னாட்டுக் குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. தற்போது அவற்றின் விற்பனை 48 சதவீதம் சரிந்துள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் 90 பாட்டில்கள் விற்பனையானது. தற்போது, 10 பாட்டில்கள்தான் விற்பனையாகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்களின் பானங்கள் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.