தமிழ் மொழியை கொண்டாடியவர் பாரதிதாசன்: தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் க.பாசுகரன்

தமிழ் இனத்தையும், மொழியையும் கொண்டாடியவர் பாவேந்தர் பாரதிதாசன் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாசுகரன் கூறினார்.
விழாவில், பேசிய மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி. உடன், பாவேந்தர் பாரதிதாசனின் பெயரன் கோ. பாரதி, கூட்டத்தில் பங்கேற்ற கவிஞர்கள்.
விழாவில், பேசிய மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி. உடன், பாவேந்தர் பாரதிதாசனின் பெயரன் கோ. பாரதி, கூட்டத்தில் பங்கேற்ற கவிஞர்கள்.
Updated on
2 min read

தமிழ் இனத்தையும், மொழியையும் கொண்டாடியவர் பாவேந்தர் பாரதிதாசன் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாசுகரன் கூறினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் வரவேற்றார். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள், பாவேந்தர் பாரதிதாசன் பெயரன் கலைமாமணி கோ.பாரதி, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், கவிஞர் கூரம், உலக தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் ஆ.மணவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக விஜிபி உலக தமிழ்ச்சங்க தலைவர் வி.ஜி.சந்தோஷம், தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாசுகரன், கவிஞர் பொன்னடியான் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விழாவில், துணைவேந்தர் க.பாசுகரன் பேசியதாவது:
பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை என்பது திராவிடத்தோடு தொடர்புடையது. தமிழ் இனத்தையும், மொழியையும் கொண்டாடி, போற்றியவர் பாரதிதாசன். அவர்தான் தமிழர்களின் நிலையை விளக்கி, தமிழியக்கம் பாடியவர். 'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா; எலி என உன்னை இகழ்ந்தவர்
நடுங்க புலி என புறப்பட்டு வா' என்ற வீர கவிஞர் பாரதிதாசனுக்கு, அரசு விழா எடுப்பது மிகவும் பெருமைக்குரியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் கவிஞர்களை பெருமைப்படுத்தும் வகையில், கம்பன் விருது, திருவள்ளுவர் விருது, ஓளவையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுடன் பாவேந்தர் பாரதிதாசன் விருதையும் வழங்கினார் என்றார்.
வி.ஜி.சந்தோஷம்: திருவள்ளுவர் பெயரில் அமைந்துள்ள இந்த ஊரில் பாவேந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கவிஞன் ஒரு காலக் கண்ணாடி. அவன் வாழ்ந்த எச்சங்களை பதிவு செய்து வருகிறான். அடிப்படையில் நானும் கவிஞன் தான். அந்த உணர்வால் தான் இன்று இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். திருவள்ளுவருக்கு உலகமெங்கும் சிலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறேன்.
கடற்கரை கவியரங்கம், வானூர்தி கவியரங்கம், கப்பல் கவியரங்கம் போன்றவைகளை நடத்தி, கவிஞர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறேன். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது, கவிஞர்களுக்கே கிடைத்த பெருமையாகும்.
கோ.விசயராகவன்: தமிழகத்தில் கவிஞர்களுக்கென தனிப் பெருமையை உண்டாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ்க் கவிஞர் நாள் விழாவாக கொண்டாட, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
உலக தமிழ் மொழி நாள் விழாவை அரசு சார்பில் கொண்டாட ஏற்பாடு செய்தவர் ஜெயலலிதா. இதன்மூலம் 200 இளைஞர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து மொழி காக்கும் அறப்பணியைத் தொடங்கி வைத்துள்ளார்.
கோ.பாரதி: தமிழகத்தில் பாரதிதாசனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும். திருவள்ளூரில் பாரதிதாசன் உருவச் சிலை அமைக்க வேண்டும்.
கொண்ட கொள்கைக்காக எதையும் விட்டுக் கொடுக்காதவர் பாரதிதாசன். தனது 17-ஆவது வயதில் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, அவருக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவற்றை எதிர்கொண்டு, பணியில் சிறந்து விளங்கினார்.
கவிதை என்பது ஒரு மனிதனை அடையாளம் காட்டும் என்பது பாரதிதாசன் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், சித்திரைத் திருநாள், திருக்குறல் முற்றோதல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை போன்றவற்றை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
அவரது முயற்சியால் தமிழ் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா தற்போது அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மானுட சக்தி, எங்கள் தமிழ், சங்கே முழங்கு என்ற தலைப்புகளில் கவிஞர்கள் கவி பாடினர்.
விழாவில், பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனை பாராட்டி, நினைவு பரிசை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.
இதில், பத்திரிகையாளர் மருது அழகுராஜ், ஏர்வாடி சு.ராதாகிருஷ்ணன், தமிழ் மண் கோ. இளவழகன், திருவள்ளுவன், பச்சையப்பன், மதிவாணன், உமா சங்கர் உள்ளிட்ட பலரும் பேசினர். அன்பரசி நன்றி கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னனைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னனைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com