அமைச்சர் காமராஜ் மீது எஃஐஆர் பதிவு செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் காமராஜ் மீது எஃஐஆர் பதிவு செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்


புது தில்லி: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புகார் தெரிவத்த பின்னர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, அவர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? அமைச்சர் என்பதால் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? என்று மோசடி தொடர்பான புகாரில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும், இதுவரை வழக்குப் பதிவு செய்யாததற்கு, தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

அமைச்சர் காமராஜ் ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கட்டட ஒப்பந்ததாரர் மோசடி புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கின் கீழ், காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,  வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் வாதிடுவது ஏன்?  என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, புகார் தாரர் குமார் ஒரு மோசடி பேர்வழி என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதாடினார். அதற்கு, ஒருவேளை மனுதாரர் மோசடி செய்திருந்தால் அதற்கு ஆதாரங்களை சமர்ப்பித்திருக்க வேண்டுமே என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வழக்கின் பின்னணி
ரூ.30 லட்சம் மோசடி புகாருக்கு உள்ளான தமிழக அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி மாநில காவல் துறைக்கு ஏப்ரல் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.குமார் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, பிரஃபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது: இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் காமராஜ் மீது மாநிலக் காவல் துறை ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை? புகார் மீது முகாந்திரம் இருப்பதால் உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன் விவரத்தை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (மே 3) தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றனர். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வரும் மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.வி.எஸ். குமார், உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மட சாலையில் உள்ள வீட்டை 2011-ஆம் ஆண்டில் வாங்கினேன். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்தனர்.

எனவே, அதிமுக பிரமுகரான காமராஜை நாடி வீட்டில் உள்ளவர்களை காலி செய்ய ரூ.30 லட்சம் அளித்தேன். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நன்னிலம் தொகுதியில் காமராஜ் வெற்றி பெற்றார். அதன் பிறகு என்னைச் சந்திக்க காமராஜ் மறுத்தார். என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் காமராஜ், அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக 2015, மார்ச் 10-ஆம் தேதி புகார் அளித்தேன். 2015, ஏப்ரலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனது புகார் மீது விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காவல் துறை உரிய விசாரணை நடத்தாத நிலையில், அமைச்சர் காமராஜ் மீதான புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி எனக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளேன் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com