
கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், பிரத்யேகக் குடை பொருத்தி பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது.
நிகழாண்டில் கோடை காலத்தின் உச்சக்கட்ட கத்திரி வெயில் தாக்கம் தற்போது நிலவுகிறது. சென்னை, வேலூர், சேலம், மதுரை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் வாட்டி எடுப்பதால், மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். அதிலும், தினமும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது.
இந்நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, இரு சக்கர வாகனத்தில் பொருத்தி, பயன்படுத்தப்படும் பிரத்யேகக் குடை வந்துள்ளது. சென்னை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த சபரீஸ் சுப்பிரமணி என்பவர் தனது வாகனத்தில் பிரத்யேகக் குடையைப் பொருத்தி உள்ளார். அவர் கூறியதாவது:
நான் வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கான கடை நடத்தி வருகிறேன். ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், இணையத்தில் பதிவு செய்து, இந்தக் குடையை வாங்கினேன். இது, வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது என்றார் அவர்.
திருப்பூர் வெள்ளைக்கோயிலை சேர்ந்த என்.அருணகிரி கூறியதாவது: நான் இந்த பிரத்யேகக் குடையை 8 மாதத்துக்கு முன்பு வாங்கி, எனது பைக்கில் பொருத்தினேன். தற்போதுவரை இது பயனுள்ளதாக இருக்கிறது என்றார் அவர்.
செகந்திரபாத்தில் தயாராகும் குடை: இந்த பிரத்யேகக் குடைக்கு தேவையான உதிரிபாகங்கள் தைவானில் தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து, இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது. தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் நகரில் இந்த பிரத்யேகக் குடை தயாரிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு மும்பை, சென்னை, தில்லி உள்பட பல நகங்களில் அதிகரித்துள்ளது.
விலை ரூ.1, 750: ஸ்கூட்டரில் பொருத்தப்படும் குடையின் விலை ரூ.1750 ஆகும். இளஞ்சிவப்பு, ஊதா, கத்திரி ஆகிய 3 நிறங்களில் குடை கிடைக்கும். பைக்கில் பொருத்தப்படும் குடையின் விலை ரூ.2,250. பைக்கில் பொருத்துவதற்கு ஒரே நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த குடையை www.stoplane.com ம் இணையத்தில் பதிவு செய்து வாங்கலாம்.
வரவேற்பு அதிகரிப்பு: சென்னையில் இந்த பிரத்யேகக் குடையை விற்பனை செய்து வரும் அனிதா அருண்குமார் கூறியதாவது: இந்த பிரத்யேகக் குடையின் விற்பனை ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிகமாக இருக்கும். தற்போது வாரத்துக்கு 40 முதல் 50 இந்த பிரத்யோகக் குடைகள் விற்பனையாகி வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தில் 200 குடையும், ஜூனில் 250 குடையும் விற்பனையானது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோவை உள்பட முக்கிய நகரங்களில் இந்த குடைக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.
70 கி.மீ வேகம் வரை செல்லலாம்:1.3 கிலோ எடைக்கொண்ட இந்த பிரத்யேகக் குடையை வழக்கமான குடையை போல விரிக்கவும் மடக்கவும் முடியும். சாலைகளில் செல்லும் போது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாது, 70 கி.மீ வேகம் வரை செல்லலாம் என்பது சிறப்பம்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.