தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது: ஜெ.தீபா அறிக்கை

தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன்
தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது: ஜெ.தீபா அறிக்கை
Published on
Updated on
1 min read

தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தமிழகத்தை அமைதி பூங்காவாக உருவாக்கினார்.

அவரின் மறைவுக்கு பிறகு தற்போது ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி வரை இந்த ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கி, தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது. நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்ல தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

எங்கு பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை தினமும் அரங்கேறி வருகிறது. தமிழக காவல் துறையின் செயல்பாடு முற்றிலும் செயலிழந்து விட்டது. சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சட்டம்-ஒழுங்கை அவரின் கட்டுக்கோப்பின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தொடங்கி தற்போது அதேபோல் அதே புழல் சிறையில் ஆசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீயணைப்பு வீரர் இளையராஜா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது.

உண்மையிலேயே இவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாரும் அடித்துக் கொன்றார்களா? என்கிற கேள்விக்கணைகள் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. அதேப் போல கொடநாடு காவலாளி தொடங்கி ஓட்டுநர் கனகராஜ், ஒப்பந்ததாரர் சுப்ரமணி வரை விபத்து, தற்கொலை என்று மரணங்கள் தொடர் கதையாகி வரும் சூழ்நிலையில் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம் அடைந்துள்ளார்.

அண்மைக் காலமாக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்கள் மரணமடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி ஓன்று நடப்பதாகவே தெரியவில்லை. இதனால் பொதுமக்களும் குறிப்பாக பெண்களும் பெரும் அச்சத்துடனும் பீதியுடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு 356-வது விதியைப் பயன்படுத்தி பொம்மை அரசான சசிகலா பினாமி அரசை காலதாமதமின்றி உடனே கலைக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்திற்கு விரைவாக தேர்தல் நடத்த முன்வர வேண்டும். ஆட்சி மாற்றமே தமிழக மக்களுக்கு விடியலை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com