மாட்டிறைச்சி விவகாரத்தில் சென்னை ஐ.ஐ. டி.யில் மாணவர்கள் மோதிக் கொண்டது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்த விவரம்:
மாட்டுச் சந்தையில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தும், இறைச்சிக்காக பசுக்கள், ஒட்டகங்கள் கொல்லப்படுவதற்கு தடை விதித்தும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜெயின் வளாகத்தில் விருந்து: இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 29-ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு தரப்பு மாணவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடும் விருந்தை நடத்தினர். இந்த விருந்து, சைவ உணவு சாப்பிடும் ஜெயின் மாணவர் வளாகத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைவம் சாப்பிடும் மாணவர்களை இது வருத்தமடைய செய்ததாம்.
இந்த நிலையில், ஐஐடி ஏரோஸ்பேஸ் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் ஆர்.சூரஜ், தனது நண்பர்களோடு ஐ.ஐ.டி. வளாகத்தில் ஹிமாலயா என்ற கட்டடத்தில் உள்ள உணவு அருந்தும் இடத்தில் தனது நண்பர்களோடு செவ்வாய்க்கிழமை நண்பகல் உணவு அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த எம்.எஸ். மூன்றாமாண்டு படிக்கும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெ.மணிஷ்குமார் சிங் (22),மாட்டிறைச்சி விருந்து குறித்து சில கருத்துகளை சூரஜிடம் தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிஷ்குமாரை சூரஜ் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் மாணவர் சூரஜுக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதேபோல மணிஷ்குமார் சிங்குக்கு, வலது கையில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும்,தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சூரஜ், மணிஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதில் சூரஜ், கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிஷ்குமார் தரப்பு மீது 3 பிரிவுகளிலும், மணிஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரஜ் தரப்பு மீது 3 பிரிவுகளிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.