
சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கெல்லாம் மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியதோ, அதே இடங்களில் இப்போதுவரை மழை நீர் தேங்குவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குறை கூறுகின்றனர்.
சென்னையில் மழை என்றாலே ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் காட்சிதான் உள்ளூர்வாசிகளுக்கும், அவ்வப்போது சென்னை வந்து செல்லும் வெளியூர்வாசிகளுக்கும் கண்ணில் வந்து மறையும். ஆக்கிரமிப்புகள், வடிகால் வசதியின்மை, சாலை பராமரிப்பின்மை, கட்டமைப்புப் பணிகளுக்காகக் தோண்டப்படும் பள்ளங்கள், சரிவர கழிவுநீர் கால்வாய் கட்டமைப்புகளை நிறைவு செய்யாமை உள்ளிட்ட காரணங்களால் சமீப ஆண்டுகளாக மழைநீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாலம், வியாசர்பாடி கணேசபுரம் பாலம், எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, அண்ணாசாலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, பட்டுலாஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, அயனாவரத்தின் பல பகுதிகள், ஓட்டேரி, கொளத்தூர், வில்லிவாக்கத்தின் சில பகுதிகள், வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையின் ஒரு பகுதி ஆகியவற்றில் தொடர் மழைக் காலத்தில் இடுப்பளவு மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையான ஒன்று என்கின்றனர் இப்பகுதிகளைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள்.
பாடம் கற்கவில்லை: கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பாதிப்பில் சென்னை மாநகரவாசிகள் அனுபவித்த இன்னல்கள் சொல்லி மாளாது. ஆனாலும் இதில் இருந்து சென்னை மாநகராட்சி சிறிதும் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
சென்னை நகருக்குள் வெள்ளம் சூழும் இடங்களாக வள்ளுவர் கோட்டம், மிர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஃபோர் ஷோர் எஸ்டேட், அடையாறு, கிழக்கு மற்றும் மேற்கு வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், திருவான்மியூர், மாம்பலம், ரங்கராஜபுரம், பெரம்பூர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எம்.கே.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், கொளத்தூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு, கொசப்பேட்டை, புரசைவாக்கம், சூளை, பெரியமேடு, நம்மாழ்வார்பேட்டை, எஸ்.எஸ்.புரம், அயனாவரம், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட்புரம், தாண்டவராய சத்திரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
மழை நீர் வடிகால் சீரமைப்பு: மழைநீர் வடிகால்கள் முறையான பராமரிப்பின்மை காரணமாகவே, சிறு மழைக்குக் கூட தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை காணப்படுகிறது.
குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்த பிறகு, வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்ல குழித் தோண்டி பெரும் குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் வழிந்தோட திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இப்பணிகள் வேகமாக நடைபெற்றன. ஆனால், இப்போது உள்ளாட்சித் தேர்தல் உடனே நடைபெற வாய்ப்பில்லை என்ற நிலை காணப்பட்ட சூழலில் இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
இதனால், வேளச்சேரி தரமணி சாலையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையைக் கடப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொற்றுநோய் ஏற்படும் அபாயம்: மழைநீர் வடிகால் வசதி சரிவர இல்லாத காரணத்தால் மடிப்பாக்கம், உள்ளகரம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று தொற்றுநோய்களை உருவாகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்த மழையில் கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நீர் தேங்கி நின்றது. மயிலாப்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான இடங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
தேவை ஒருங்கிணைந்த வடிகால்கள்: கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அறிக்கை சென்னையில் மழை நீர் வடிகால்களைச் சீரமைப்பதில் நடந்த குளறுபடிகளைத் துல்லியமாக சுட்டிக்காட்டியுள்ளது.
'சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைப்பு அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு, கோவளம் ஆகிய நான்கு வடிநிலங்களுடன் இறுதியாக இணையும் வகையிலான திட்டம் ரூ.3,531.43 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014-ல் உருவாக்கப்பட்டது.
இப்பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்கள் நில அமைப்பியல், வானிலையியல் மற்றும் நீரியல் ஆய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது விதி. உரிய வடிவமைப்பு இல்லாமலேயே அவை கட்டப்பட்டன.
அவை இயற்கையான நீர் வழிகள், நீர் நிலைகளுடன் இறுதியாக இணைக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் இன்றி சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்துக்கு முக்கியக் காரணம் இந்த குளறுபடிகளே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட முக்கிய ஏரிகள் !
ஒரு காலத்தில் மிக முக்கியமான நீராதாரமாக இருந்த ஏரிகள், இப்போது மிக மோசமான அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இது சென்னைக்கு மட்டுமானது அல்ல. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர், விவசாயத்துக்காக மழைக் காலங்களில் சேமிப்புக் கட்டமைப்பாக இருந்த ஏரிகள் பலவும் பருவமழையில் பெய்யும் நீரை சேமிக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பாதிக்கப்பட்ட ஏரிகள்:
வில்லிவாக்கம் ஏரி.. 1972-ஆம் ஆண்டு இதன் பரப்பளவு 214 ஏக்கராக இருந்தது.
இப்போது 20 ஏக்கராக அதன் எல்லையைச் சுருக்கிக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 'சிட்கோ' தொழிற்பேட்டையும், சிட்கோ நகரும் இந்த ஏரிக்கரையில் விரிவடைந்ததே இதற்குக் காரணம்.
2005-இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பெரும்பாலான வெள்ள நீரை இந்த ஏரிதான் தக்கவைத்தது. அதனால், பெரிய பாதிப்புகள் இப்பகுதியில் அப்போது ஏற்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்த ஏரி பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 2015 -இல் வெள்ளநீரை இந்த ஏரியில் தேக்க முயற்சித்தபோது சிட்கோ நகரை 15 நாள்கள் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
கொரட்டூர் ஏரி: 600 ஏக்கர் பரப்பளவில் இந்த நன்னீர் ஏரி விரிந்துள்ளது. நீர்வளம் மிக்க இந்த சதுப்பு நிலப் பகுதி பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது. சதுப்புநிலத்தைச் சுற்றி இடைப்பட்ட மண்டலப் பகுதி இல்லாததால் குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. அதனால், சதுப்பு நிலத்தின் எல்லைகள் குறைந்து வருகின்றன.
நாராயணபுரம் ஏரி: பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி 200 அடி ரேடியல் சாலையாலும், பேட்மிண்டன் திடல், கோயில் போன்றவற்றாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. இந்த ஏரியின் கொள்ளளவு உயர வேண்டுமெனில் ஆகாயத் தாமரைகள் நீக்கப்பட வேண்டும்.
கீழ்க்கட்டளை - நாராயணபுரம் ஏரிகளை இணைக்கும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மையான அகலம் 60 அடி. ஆனால், தனியார் குடியிருப்புகள் கால்வாயின் அகலத்தை 40 அடியாகக் குறைத்து ஆக்கிரமித்துள்ளன.
பல்லாவரம் பெரிய ஏரி: மேற்கு குரோம்பேட்டை, கிழக்கு குரோம்பேட்டையைப் பல்லாவரம் பெரிய ஏரியில் இணைப்பதற்கு 2 பெரிய நீர்க் கால்வாய்கள் உள்ளன.
இதில் கட்டபொம்மன் கால்வாய் 33 அடியிலிருந்து 7 அடி நீளமாக குறையும் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. துர்கை அம்மன் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை நீளும் இந்தக் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பே இப்பகுதிகளில் வெள்ளம் வருவதற்குக் காரணம். குரோம்பேட்டையைப் பல்லாவரம் பெரிய ஏரியுடன் இணைக்கும் கால்வாய்கள் 30 முதல் 60 அடி வரை அகலமாகக் காணப்பட்டன.
இந்நிலையில் குரோம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஏரியின் 70 சதவீதப் பரப்பு குடியிருப்புகளாக மாறியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: 60 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தச் சதுப்பு நிலத்தின் இப்போதைய பரப்பு 1,500 ஏக்கர்தான். பள்ளிக்கரணைக்கும், வேளச்சேரிக்கும் இடைப்பட்ட இப்பகுதி 2015 டிசம்பர் வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். நிபுணர்கள் இப்பகுதி குடியிருப்புகளுக்கு உகந்ததில்லை என்று தெரிவித்தாலும், தொடர்ந்து இப்பகுதியில் பெரிய குடியிருப்புகள் எழுப்பப்படுகின்றன.
திருப்பனந்தாள் ஏரி: திருப்பனந்தாள் ஏரியையும் அடையாறையும் இணைக்கும் கால்வாய் மிக மோசமாக கட்டடங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தக் கால்வாயில் நீரோட்டம் ஏறக்குறைய முழுமையாக தடைப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் ஏரி: பாசனத்துக்குப் பயன்பட்டு வந்த சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் இருக்கும் நீர், செம்பாக்கம், அஸ்தினாபுரம் பகுதி உள்ள நீர் தொட்டிகளில் நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஏரிகள் குப்பைகள், மருத்துவமனைக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதனால் 80 ஏக்கர் பரப்பளவில் இருந்த சிட்லபாக்கம் ஏரி 40 ஏக்கராக குறைந்துள்ளது.
காணாமல்போன ஏரிகள்!
இன்றையத் தலைமுறையினருக்கு சில குறிப்பிட்ட இடங்களில் ஏரிகள் இருந்தனவா என்பதே தெரியாது. அந்த அளவுக்கு பல ஏரிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி மறைந்துவிட்டன. ஒருசில மிகவும் சுருங்கியுள்ளன என்பதுதான் கசப்பான உண்மை.
1. நுங்கம்பாக்கம் ஏரி
2. தேனாம்பேட்டை ஏரி
3. வியாசர்பாடி ஏரி
4. முகப்பேர் ஏரி
5. திருவேற்காடு ஏரி
6. ஓட்டேரி
7. மேடவாக்கம் ஏரி
8. பள்ளிக்கரணை ஏரி
9. போரூர் ஏரி
10. ஆவடி ஏரி
11. கொளத்தூர் ஏரி
12. இரட்டை ஏரி
13. வேளச்சேரி ஏரி
14.பெரும்பாக்கம் ஏரி
15. பெருங்களத்தூர் ஏரி
16. கல்லு குட்டை ஏரி
17. வில்லிவாக்கம் ஏரி
18. பாடிய நல்லூர் ஏரி
19. வேம்பாக்கம் ஏரி
20. பிச்சாட்டூர் ஏரி
21. திருநின்றவூர் ஏரி
22. பாக்கம் ஏரி
23. விச்சூர் ஏரி
24. முடிச்சூர் ஏரி
24. சேத்துப்பாடு ஏரி
25. செம்பாக்கம் ஏரி
26. சிட்லபாக்கம் ஏரி
27. அல்லிக் குளம் ஏரி (இன்றைய நேரு ஸ்டேடியம்)
28. மாம்பலம் ஏரி
29. கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளங்கள்.
32. ஆலப்பாக்கம் ஏரி
33. வேப்பேரி
34. விருகம்பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி
சென்னை மாநகராட்சி செய்தது என்ன ?
2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து உலக வங்கி நிதியைப் பெற்று சென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான ஆலந்தூர், வளசரவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1,104 கோடியில் 376 கி.மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, அதில் 300 கி.மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டு, அவை பெரிய வடிகால்வாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்களை தரும் இன்சாட் 3டி !
இந்திய வானிலை ஆய்வு மையம் மிகத் துல்லியமாக மழை, புயல் வெள்ள எச்சரிக்கைகளை விடுகிறது. இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய இன்சாட் 3 டி.ஆர். என்ற செயற்கைக் கோளாகும்.
இந்த செயற்கைக் கோள் அனுப்பும் படங்கள்3 டி புகைப்படங்களாக இருப்பதால் வானிலை நிலவரம் துல்லியமாக கணிக்க முடிக்கிறது.
குறிப்பாக, இரவு நேரத்திலும் தெளிவான புகைப் படங்களையும், பிற தகவல்களையும் படம்பிடித்து அனுப்பவதற்கான வசதிகள் இந்தச் செயற்கைக்கோளில் உள்ளன. அதிநவீன கேமரா, பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜியோ ஸ்டேஷனரி சுற்றுப் பாதையில் இருந்தவாறு 26 நிமிடங்களுக்கு ஒரு முறை வானிலை குறித்த துல்லியத் தகவல்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்புகிறது.
கடந்தாண்டில் மழைக் குறைவு !
தமிழகத்தின் 48 சதவீத மழைத் தேவையை வடகிழக்குப் பருவ மழையே தீர்த்து வைக்கிறது. ஆனால் கடந்தாண்டு பெய்த பருவ மழை தனது இயல்பான அளவில் பாதியைக் கூட பூர்த்தி செய்யாததே இவ்வாண்டு பல மாவட்டங்களில் நிலவிய வறட்சிக்குக் காரணம்.
பொதுவாக வடகிழக்குப் பருவமழையில் தமிழகத்தின் சராசரி மழை அளவு 440 மி.மீ. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழை 168.3 மி.மீ. மட்டுமே பெய்தது.
கடந்தாண்டு, சென்னையில் 57%, கடலூரில் 81%, கன்னியாகுமரி 59%, நாகப்பட்டினம் 74%, புதுக்கோட்டை 61%, ராமநாதபுரம் 61%, திருவள்ளூர் 58%, திருவாரூர் 65%, தூத்துக்குடி 63% மட்டுமே மழை பதிவானது.
வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை காலங்கள்
பருவமழைக்கு முக்கிய காரணம் சூரியனின் நகர்வுதான். பூமியின் நகர்வில் சூரியன் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே வருவதால், மகர ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையிலான வெப்ப மண்டலப் பகுதியில் மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வெப்ப மண்டல காற்றுக் குவிப்பு பகுதி, சூரியனின் நகர்வை சற்றே பின் தொடரும். சூரியன் வட துருவத்தில் இருக்கும் போது, ஆசியாவில் பருவ மழைக் காலம் நிலவுகிறது. சூரியன் தென் துருவத்தில் இருக்கும் போது ஆஸ்திரேலியாவில் பருவ மழை காலம் நிலவுகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரை மிக முக்கியமான பருவகாலம் தென் மேற்கு பருவ மழைக் காலம் . இந்தியாவின் பெரும்பான்மையான உணவு உற்பத்தி தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளது.
தென்மேற்கு பருவமழை: தென்மேற்கு பருவ மழையின்போது தமிழகம் மழை மறைவு பகுதியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை தடுப்பதால் மழை மேகங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை. இதனால் தமிழகம் இதில் அதிக மழையைப் பெறமுடிவதில்லை.
கோடையில் இந்திய துணைகண்டம் கடுமையான வெப்பம் காரணமாக ஒரு மிக பெரிய காற்று அழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுகிறது. அப்போது தென் துருவப் பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே அதிகக் காற்று அழுத்தம் உருவாகிறது. இந்த காற்று அழுத்தம் இந்திய துணைக் கண்டத்தில் நிலவும் குறைந்த காற்று அழுத்தத்தை நோக்கி வருகிறது. இதுவே இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஈரப்பதத்தைப் பெற்று தென்மேற்கு பருவ மழையை உருவாக்குகிறது.
வடகிழக்குப் பருவமழை : இந்நேரத்தில் சைபீரியா பகுதிகளில் பைகால் பகுதிகளில் அதிகரிக்கும் குளிர் காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரிக்க தொடங்கும். சைபீரியா வலஞ்சுழல் (அதிகக் காற்று அழுத்தம்) உருவாகி ஆசியா முழுவதும் உலர்ந்த குளிர் காற்றை செலுத்த தொடங்குகிறது.
ஏனைய இந்தியப் பகுதிகளில் குளிர் காலத்தை உருவாக்கும் இக்காற்று வங்க கடலைக் கடந்து வரும் போது ஈரப்பதம் பெற்று வடமேற்குப் பருவமழையாக மாறுகிறது.
அவசரக் கட்டுப்பாட்டு மைய எண்கள் !
வடகிழக்குப் பருவமழைப் பாதிப்புகளைத் தமிழக அரசின் 1070, 1077 என்ற எண்களில் தொடர்புகொண்டு பேசலாம். மேலும், 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைப் பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைப் பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
- தொகுப்பு: ஆர்.ஜி.ஜெகதீஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.