வருமானவரி சோதனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்: ஈஸ்வரன்

வருமானவரி சோதனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வருமானவரி சோதனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்: ஈஸ்வரன்
Updated on
2 min read

வருமானவரி சோதனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்ற அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை என்பது காலதாமதமான நடவடிக்கை.

இந்த சோதனை அரசியலுக்காக நடக்கிறதோ, தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கிறதோ அல்லது தினகரனை மிரட்டுவதற்காக நடக்கிறதோ எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டிய ஒன்று. இன்று சோதனை நடக்கின்ற அனைத்து சொத்துக்களுமே ஜெயலலிதா, சசிகலா வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தது. இவை அனைத்து சொத்துகளுமே எப்படி வாங்கப்பட்டன என்பதற்கான விசாரணைகளில் சசிகலா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்த அத்தனை பதில்களுமே குளறுபடியானவை. 

இந்த சொத்துக்கள் அனைத்துமே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்துகள் தமிழக மக்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களின் கண்ணுக்கு தெரிந்து சேர்க்கப்பட்டவை. தொடர்ந்து அதற்கான சரியான கணக்குகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதனால் இவை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. சோதனைக்கு பிறகு சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டன என்பதை வருமான வரித்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற அத்தனை சொத்துக்களும் ஜெயலலிதாவுக்கோ அல்லது அதிமுக கட்சிக்கோ சொந்தமானவை என்றுதான் தமிழக மக்கள் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா போன்ற விலைமதிப்புமிக்க சொத்துக்கள் எல்லாம் சசிகலா குடும்பத்தினருடைய பெயர்களில் இருக்கிறது என்ற செய்தி வெளியாகி எந்தெந்த சொத்து யார்யார் பெயரில் இருக்கிறதோ அது தங்களுடைய சொத்து என்று உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் இந்த சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டது, யார்யார் பெயரில் எப்போது மாற்றப்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க ஆட்சியில் எப்படி செல்வாக்கோடு வலம் வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஜெயலலிதா மரணத்தின்போது அமைச்சர்களை கூட பக்கத்தில் அண்டவிடாமல் ஜெயலலிதாவின் பூத உடலை சுற்றி நின்றவர்கள் என்பதும் இந்த உலகம் அறியும். 

இந்த சோதனைகள் வருமானம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல ஊழலும் சம்பந்தப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அ.தி.மு.க தொண்டர்கள் கோடிக்கோடியாக கொடுத்த சந்தா பணத்தில் இருந்துதான் நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவை வளர்ந்தன என்று சொத்துக்குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோரே நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் போது இவையெல்லாம் அ.தி.மு.க கட்சியின் சொத்துக்கள் ஆகாதா ?. அது எப்படி சசிகலா குடும்பத்தினருடைய சொத்துக்கள் ஆனது. 

இன்று  நடக்கின்ற இந்த சோதனையின் மூலம் கண்டுப்பிடிக்கப்படுகின்ற உண்மைகளும், எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசியல் அழுத்தத்திற்காக இந்த வருமானவரி சோதனைகள் நடத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும்கூட இது தேவை என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com