20, 21-ல் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் 20, 21-ம் தேதிகளில் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹனன்முல்லா தெரிவித்துள்ளார். 
20, 21-ல் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

வரும் 20, 21-ம் தேதிகளில் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹனன்முல்லா தெரிவித்துள்ளார். 

ஹரியாணா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டு தீர்மான விளக்க தமிழ்-புதுச்சேரி மாநில பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி.சண்முகம், நிர்வாகிகள் கே.முகமது அலி, டி.ரவீந்திரன், பெருமாள், ஏ.நாகப்பன், புதுவை பிரதேச செயலாளர் வி.சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர். 

சங்கப் பொதுச் செயலாளர் ஹனன்முல்லா தீர்மானங்களை விளக்கிப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 52 பேர் வீதம் இதுவரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு விலை கிடைக்காமை, பல்வேறு பிரச்னைகளால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடும் மன உளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளனர். பிரதமர் மோடி அரசு விவசாய விரோத அரசாக உள்ளது. தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தி பொருள்களுக்கு அடக்க விலையுடன் கூடுதலாக 50 சதவீதம் விலை அறிவிக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாரிடம் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 20, 21-ம் தேதி தில்லியில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1084 சங்கங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். அங்கேயே விவசாயிகள் நாடாளுமன்றமும் கூட்டப்பட்டு 2 கோரிக்கைகளும் சட்டமாக நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் வழங்கப்படும். 

இவற்றை எடுத்துக் கூறுவதற்காக 5 பிரசார யாத்திரை பயணங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக புதுவையிலும் இந்த விளக்கக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றார் ஹனன்முல்லா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com