தூத்துக்குடியில் முடங்கிக் கிடக்கும் மீன்பிடித் தொழில்!

தூத்துக்குடியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் முடங்கிக் கிடக்கும் மீன்பிடித் தொழில்!
Updated on
2 min read

தூத்துக்குடியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை ரூ. 300 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றன. இதனை நம்பி ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது மீன் வளத்துறை உத்தரவு.
கடந்த 1983 ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி, இரவில் கடலில் தங்கி மீன்பிடிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், போதிய மீன்வரத்து இல்லாததால் இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாகவே விசைப்படகு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி 163 விசைப்படகுகளில் மீனவர்கள் இரவு கடலில் தங்கி மீன்பிடித்தனர். இதையடுத்து, இந்த 163 விசைப்படகுகளுக்கும் ஒரு மாதம் கடலில் மீன்பிடிக்கத் தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், மீன்பிடி துறைமுகமும் மூடப்பட்டது.
அரசின் விதிமுறைப்படி மீன்பிடிக்க விரும்பும் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்று அறிவித்த மீன்வளத் துறையினர், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் அனுமதியை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும், 
தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்றும் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.
இதற்கிடையே, நீதிமன்றத்தை நாடிய விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள், 2016 ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி தங்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்; ஆனால் மீன்வளத் துறை அதிகாரிகள் 1983 ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி தங்குகடலில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என கூறுகின்றனர் எனக் கூறி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொழில் நடைபெறாததால் இதுவரை ஏறத்தாழ 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக விசைப்படகு மீனவ அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் போஸ்கோ கூறியது: ஆழ்கடல் மீன்பிடிப்பை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. சென்னையில் அண்மையில் பேசிய மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 12 கடல் மைல் தாண்டி 30 கடல் மைல் தொலைவு வரை செல்லும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்கப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 167 படகுகள் 20 மீட்டருக்கு மேல் நீளமுள்ளவை. மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 20 மீட்டருக்கு மேல் நீளமுள்ள படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையின்படி 20 மீட்டர் நீளமுள்ள படகுகளை பதிவு செய்து ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி மீன்வளத் துறையிடம் விண்ணப்பித்தும் அவர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். ஆள் பற்றாக்குறை, நாட்டுப்படகு மீனவர்களுக்கு பாதிப்பு, விபத்தை ஏற்படுத்துவோம், சீன இயந்திரங்களை பயன்படுத்துகிறோம் என பல்வேறு தகவல்களை மாறி மாறி மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவது கண்டனத்துக்குரியதாகும். 12 கடல் மைல் தொலைவு தாண்டி மீன்பிடிப்பதால் நாட்டுப்படகுகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இந்தப் பிரச்னையில் அரசு தலையிட்டு, மத்திய அரசின் அரசாணையில் உள்ளது போல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் அரசாணைப்படி மாநில அரசு மீன்வளத் துறை அதிகாரிகள் படகுகளை பதிவு செய்து ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com