வனப்பகுதியில் மரங்களை வெட்டி சாலை அமைக்க ஆதிவாசிகள் எதிர்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் வனப் பகுதியில் மரங்களை வெட்டி சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
வனப்பகுதியில் மரங்களை வெட்டி சாலை அமைக்க ஆதிவாசிகள் எதிர்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் வனப் பகுதியில் மரங்களை வெட்டி சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பெரியகுளம் வனச்சரகத்துக்குள்பட்ட கன்னக்கரை, சொக்கன் ஆலை, அலங்காரம், மருதையனூர் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் தோதகத்தி, வெண்சந்தனம், குமிழ், வேங்கை என 60-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும், காட்டெருமை, கடமான், கருமந்தி, சாம்பல் நிற அணில், புலி, சிறுத்தை உள்ளிட்ட அரியவகை விலங்குகளும் உள்ளன.
இந்த வனப்பகுதியில் கன்னக்கரையில் இருந்து சொக்கன்ஆலை, அலங்காரம், மருதையனூர் வரை 9 கி.மீ தூரத்துக்கு 2008- ஆம் ஆண்டு ரூ.5.64 கோடி மதிப்பில் சாலை அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் மூலம் வனத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து 9.200 கி.மீ. தூரத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள மரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து, எல்லைக் கற்களும் ஊன்றப்பட்டன. தற்போது இங்கு சாலை அமைக்க நிலம் கையப்படுத்தும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
இப்பகுதியில் 600 ஏக்கர் அளவுக்கு மட்டுமே தனியார் வசம் விவசாய நிலம் உள்ளது. மேலும் இப்பகுதியில் 49 பேர் மட்டுமே வசிக்கின்றனர். 
மேலும் கன்னக்கரையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் 20 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பகுதி வரை தற்போது சாலை வசதி உள்ளது. இதனிடையே இத்திட்டத்துக்கு சமூக ஆர்வலர்களும், ஆதிவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 29 பேர் மட்டுமே வசிக்கும் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அழித்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பல கோடி ரூபாயை செலவழித்து சாலை அமைப்பது தேவையற்றது.
மேலும் அகமலை பகுதியில் பெய்யும் மழை நீர் இப்பகுதி வழியாக சோத்துப்பாறை அணைக்கு வந்தடைகிறது. இப்பகுதியில் சாலை அமைக்கும் போது மண் அரிப்பு ஏற்பட்டு அதிகப்படியான மணல் மற்றும் கற்கள் பெயர்ந்து சோத்துப்பாறை அணையை வந்தடையும். இதனால் அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. 
அத்துடன் மரங்களை வெட்டி சாலை அமைப்பதால், இப்பகுதியில் வனவளம் பாதிக்கப்பட்டு மழைப்பொழிவு குறையும். எனவே இப்பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்றனர்.
சொக்கன் ஆலையை சேர்ந்த ஆதிவாசி கூல்ராஜ் கூறியதாவது:
மக்கள் சென்று வர மட்டுமே சாலை வசதி வேண்டும். எங்கள் சொக்கன் ஆலையில் 20 ஆதிவாசிகளும், தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்பவர்கள் 9 பேர் என 29 பேர் மட்டுமே வசித்து வருகிறோம். இந்த 29 பேருக்காக 1000 மரங்களை வெட்டி சாலை அமைப்பது தேவையற்றது. இதுகுறித்த எங்கள் எதிர்ப்பை வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளோம்.
இப்பகுதியில் சாலை அமைத்தால் அரிய வகை விலங்குள் அழியும் அபாயம் உள்ளது. அத்துடன் சாலை அமைக்கும் பகுதியில் எங்கள் முன்னோர் வாழ்ந்த குகைகள் உள்ளது. இப்போதும் மழை காலங்களில் நாங்கள் அங்கு சென்று தங்கி வருகிறோம். சிறப்பு வாய்ந்த குகைகளை உடைத்து சாலை அமைப்பதால் எங்கள் பாரம்பரியம் அழியும். மேலும் மரங்களை வெட்டி கடத்தும் சம்பவங்களும் அதிகரிக்கும்.
எனவே எங்கள் பகுதியில் சாலை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட்டு விட்டு, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், கழிப்பறைகளையும் கட்டித் தர வேண்டும் என்றார்.
இதுபற்றி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் வடிவேல் கூறியதாவது: 
இப்பகுதிக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக சாலை அமைப்பதற்காக இத்திட்டத்தை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கியுள்ளோம். வனத்துறை அனுமதி வழங்கிய பின் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com