
மதுரை: மாணவர்களின் உயிரைக் கொல்லும் 'ப்ளூ வேல்' விளையாட்டினை மற்றவர்களுடன் பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகெங்கும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிரைப் பறித்த ஆபத்தான ப்ளூ வேல் விளையாட்டினால், தமிழகத்தில் மதுரையினைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் கடந்த வாரம் பலியானார். மேலும் அவருடன் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விளையாட்டினை விளையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பான வழக்கினை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்தது. அந்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது தமிழகத்தில் ப்ளூ வேல் விளையாட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டதாகவும், இங்கு அதனை தரவிறக்கம் செய்ய இயலாது என்றும் சிபிசிஐடி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் தற்பொழுது இந்த விளையாட்டானது ஷேர் இட் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் வழியாகவே பகிரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் 7-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து விரிவான பதிலை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
உடனே நீதிபதி மாணவர்களின் உயிரைக் கொல்லும் இந்த 'ப்ளூ வேல்' விளையாட்டினை மற்றவர்களுடன் பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் உள்துறை செயலர் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.