
மின்னணு குடும்ப அட்டை களைச் சரிபார்த்த பின்னரே பொதுமக்களிடம் அளிக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 1 கோடியே 95 லட்சத்து 26 ஆயிரத்து 145 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 6 கோடியே 85 லட்சத்து 78 ஆயிரத்து 735 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தகுதியானோருக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில், பயன்பாட்டில் இருந்து வரும் பழைய குடும்ப அட்டைகளை மாற்றி, அதற்குப் பதிலாக, நவீன மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளில் புகைப்படம் சரியாக இல்லாமலும், தலைவர் பெயர் மாறியும், தெளிவான முகவரியில்லாத நிலையிலும் உள்ளதாகப் புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து நியாய விலைக்கடைக்காரர்கள் அட்டைகளை சரிபார்த்த பின்னரே வழங்க வேண்டும். இதில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பானவர்களிடம் சரியான குடும்ப அட்டை நகல், புகைப்படம், முகவரி விவரங்களை நியாய விலைக்கடைக்காரர்கள் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர், மின்னணு குடும்ப அட்டைகள் தவறின்றி சரியான முறையில் வழங்குவதற்கு நியாய விலைக்கடைக்காரர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரையில் 1.20 கோடி குடும்ப அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால், இந்த அட்டைகள் பெற ஆதார் அட்டைகள் பதிவு செய்யாதோர், புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண் விவரங்களை அளிக்காதோர் அந்தந்த பகுதி நியாய விலைக் கடைகளில் அளித்துப் பயனடையலாம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.