

சென்னையில் ராகிங்கை தடுக்கும் வகையில் கல்லூரிகளில் மாறுவேடத்தில் மாணவர்களைக் கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ராகிங் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அதை முழுமையாகத் தடுக்க முடியாத நிலையே இருக்கிறது. கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளை விட, நகர்ப்புறத்தில் இருக்கும் கல்லூரிகளிலேயே அதிகமாக ராகிங் கொடுமைகள் நடந்தேறுவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தைக் காட்டிலும், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் ராகிங் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் ராகிங் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கல்லூரிகளில் ராகிங்கைத் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் மொத்தம் 13 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 4731 மாணவ-மாணவிகள் முதலாமாண்டில் படிக்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 200 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் உள்ளன.
இக்கல்லூரிகளில் ராகிங்கைத் தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சில நாள்களுக்கு முன் நடத்திய கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர். மருத்துவம், பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ராகிங் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங்கைத் தடுப்பதற்குப் புகார் பெட்டிகள் அமைக்க வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ராகிங்கைத் தடுப்பதற்குப் புதிதாக இரு நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை மாறு வேடத்தில் கண்காணிக்க முடிவு செய்தனர். கல்லூரி வளாகத்துக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தங்கள், உணவகங்கள், தனியார் மாணவர் விடுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. தேவைப்படும்பட்சத்தில் மட்டுமே கல்லூரிக்குள் சென்று கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மாணவர்கள் கல்லூரிக்கு வரும் பேருந்துகளையும் போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதியும், மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தக் கண்காணிப்புப் பணியில் குற்றப்பிரிவு போலீஸாரும், பெண் போலீஸாரும் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையின் மூலம் முதலாமாண்டு மாணவர்களை குறிவைத்து நடைபெறும் ராகிங் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.