அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்: சிறையில் இருந்து விடுதலையான மாணவி வளர்மதி

அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவேன் என்று கோவை சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுதலையான சேலம் மாணவி வளர்மதி தெரிவித்துள்ளார்.
விடுதலை பெற்று கோவை சிறையிலிருந்து கோஷமிட்டபடி வெளியே வந்த வளர்மதியை வரவேற்ற பல்வேறு அமைப்பினர்.
விடுதலை பெற்று கோவை சிறையிலிருந்து கோஷமிட்டபடி வெளியே வந்த வளர்மதியை வரவேற்ற பல்வேறு அமைப்பினர்.
Published on
Updated on
1 min read

அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவேன் என்று கோவை சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுதலையான சேலம் மாணவி வளர்மதி தெரிவித்துள்ளார்.
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவியும், தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளருமான வளர்மதி, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாகக் கூறி ஜூலை 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், வளர்மதி ஜூலை 17-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை இல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசியல் சாசனம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதன்படி போராடிய தனது மகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்றும் கூறி உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை மாதையன் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்நிலையில், அவர் கோவை மத்தியச் சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் திரண்டிருந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மேளதாளம் முழங்க வளர்மதியை வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்வதாலோ, சிறையில் அடைப்பதாலோ சமூக அநீதிகளைக் கண்டிக்கும் என்னைப் போன்றவர்களை முடக்கிவிட முடியாது. அடக்குமுறை, போராளிகளை மழுங்கடிக்காது. அது அவர்களை மேலும் வலிமையானவர்களாகவே மாற்றும்.
சிறையில் அடைத்த பிறகும் என் மீது போலீஸார் அடக்குமுறையை கையாண்டனர். சந்தித்து ஆறுதல் சொல்ல வந்தவர்களை உளவுப் பிரிவு போலீஸார் மிரட்டியுள்ளனர். மேலும், அனைவர் மீதும் நக்ஸல் முத்திரை குத்தப் பார்க்கின்றனர்.
மாணவி அனிதாவின் துயர முடிவு, பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை சம்பவம் ஆகியவை மீண்டும் போராட்டத்துக்குத் தூண்டுகோலாகிவிட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். அதேநேரம், பெரியார் பல்கலைக்கழகத்தில் எனது படிப்பைத் தொடருவேன் என்றார்.
சிறையில் இருந்து விடுதலையானதும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் பகுதிக்குச் சென்ற வளர்மதி, அங்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com