தமிழ் உயர்ந்தால் ஜாதி மத வெறுப்புகள் அகலும்!: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

தமிழ் உயர்ந்தால் ஜாதி மத வெறுப்புகள் அகலும் என்று 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் கூறினார். 'தினமணி' சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற
Published on
Updated on
2 min read

தமிழ் உயர்ந்தால் ஜாதி மத வெறுப்புகள் அகலும் என்று 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் கூறினார். 'தினமணி' சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் 'மொழிகாத்தான் சாமி' கட்டுரையாற்றும் நிகழ்ச்சிக்கு 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசியது: 
மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் குருகுலத்தில் கிறிஸ்தவர் உள்ளிட்ட பிற மதங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு சாலை மாணாக்கர்களாகத் தமிழ் கற்றனர். அவரவர் ஆச்சாரங்களைக் கடைப்பிடித்துத் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றினர். அவர்களுக்குள் வெறுப்பு இருக்கவில்லை. அவர்களையெல்லாம் தமிழ் இணைத்தது. தமிழுக்கு முன்னால் அவர்கள் தங்களது ஜாதி, மதங்களை மறந்தனர். 
தமிழ் தளர்ந்தது; ஜாதிகளும் மதங்களும் உயர்ந்தன. தமிழ் உயர்ந்தால் பிரிவுகள் அகலும். தமிழ் தாழ்ந்தால் பிரிவுகள் உயரும் என்பதை இது உணர்த்து
கிறது.
கிராம கொடையை மறுத்த உ.வே.சா.: இராமநாதபுரம் சேதுபதி மன்னரிடம் மிகவும் நட்பு பாராட்டி வந்தவர் உ.வே.சா. அவர் உவேசாவின் அரும் தமிழ்ப் பணிக்காக சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தையே கொடுக்க முன்வந்தபோது அதனால் தனது தமிழ்ப்பணிக்கு பயனில்லை என்று கருதி, அதை மிகுந்த அடக்கத்துடன் வாங்க மறுத்து விட்டார் உ.வே.சா. 
'எனக்கு இப்போது எதிலும் குறையில்லை. கல்லூரியில் எனக்கு சம்பளம் வருகிறது. எனக்கு அவ்வளவு பெரிய குடும்பமும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு சௌகரியமாக வாழத் தெரிந்தவன் நான். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என எண்ணக் கூடாது' என்று மன்னரிடம் கூறினார் அவர். உ.வே.சா.வின் தமிழ்ப் பணிக்கு கடைசிவரை துணை நின்றது சேதுபதி சமஸ்தானம். 
1919 ஏப்ரல் மாதம் ரவீந்திரநாத் தாகூர் சென்னை வருகிறார். உவேசாவை அவரது திருவல்லிக்கேணிவீட்டிற்கே வந்து சந்திக்கிறார். உவேசாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி வங்க மொழியில் கவிதை எழுதிப் பாராட்டியிருக்கிறார் குருதேவர் ரவீந்திரநாத் தாகூர்.
தமிழின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் உ.வே. சாமிநாதையர் குறித்து பாரதியார், நாமக்கல் கவிஞர், தாகூர், வ.சுப. மாணிக்கனார் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் பாராட்டியுள்ளனர். தமிழுக்கு அரும்பணியாற்றிய உவேசாவின் மகுடத்தில் வைரமுத்துவின் இந்தக் கட்டுரை இன்னொரு இறகு என்றார் 
கி. வைத்தியநாதன்.
ஆண்டுதோறும்  உவேசா உலகத் தமிழாராய்ச்சி விருது
அருந்தமிழ்ச் செல்வத்தை தமிழ்கூறு நல்லுலகிற்கு மீட்டுத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் பெயரால் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை கொண்ட உலகத் தமிழாராய்ச்சி விருதினை சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ளதாக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
தமிழறிஞர் வேலூர் நாராயணனுக்கு உவேசா உலகத்தமிழ் ஆராய்ச்சி விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளது என சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் மொழிகாத்தான் சாமி நிகழ்ச்சியில் அவர் கூறினார். இனி ஆண்டுதோறும் தொடர்ந்து உ.வே.சாமிநாதையர் பெயரில் இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
ஐம்பெருங்காப்பியங்களில் பொதிந்துள்ள பேருண்மைகளை மையப்படுத்தி 'காப்பியமும் தமிழன் வாழ்வியலும்' என்னும் பன்னாட்டு அளவிலான கட்டுரைப் போட்டியை முஸ்தபா தமிழ் அறக்கட்டளை கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்தது. ஏறத்தாழ 150 பக்கங்கள் கொண்டதாகவும் இலக்கிய வலிமையுடன் மானுட அறங்களை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் அனுப்பப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டு அறிஞர்கள் குழு ஆய்வு செய்தது. 
போட்டியின் நடுவர்களாக சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் வ.மகேஸ்வரன் மற்றும் இந்தியாவிலிருந்து பேராசிரியர் முனைவர் க.அன்பழகன் ஆகியோர் விருதுக்குத் தகுதியான கட்டுரை நூலைத் தேர்வு செய்தனர். 
கலைமாமணி வேலூர் ம.நாராயணன் எழுதிய ஆய்வுக்கட்டுரை இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com