
சென்னை: இடைக்காலத் தடையை மீறி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை அமல்படுத்தலாமா, மெமோ கொடுக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு விடுத்த எச்சரிக்கை, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவுகளை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த என்றும், 12-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9-ஆம் தேதி அரசு தரப்பில் நோட்டீஸ்(17-ஏ) அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அந்த நோட்டீஸ் குறித்து கவலைப்படவில்லை.
இதையடுத்து தங்களது போராட்டங்களை வலுப்படுத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், எஸ்மா, டெஸ்மா போன்றவற்றை சட்டங்கள் எங்கள் மீது பாய்ந்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதிமொழி அளிக்க வேண்டும். உறுதிமொழி அளிக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும். இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடக்கும். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். அரசின் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களின் பட்டியலை அரசு தயார் செய்து வருவதாகவும், அதன்படி நேற்று பணிக்கு வராத 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் மீதும், 60 ஆயிரம் ஆசிரியர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாமா, மெமோ கொடுக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விடுப்பு எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் கடந்த 6-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.