"தமிழர்களின் பண்டைய பெருமைகளை அறிய திருப்பட்டூரில் ஆய்வுகள் நடத்துவது அவசியம்'

தமிழர்களின் பண்டைய கால பெருமைகளை அறிய கீழடி போன்று, திருப்பட்டூரிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வியல் அறிஞர் க. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை களஆய்வின் போது கோயில் வரலாற்றை விளக்கும் வரலாற்று ஆய்வியல் அறிஞர் க. நெடுஞ்செழியன்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை களஆய்வின் போது கோயில் வரலாற்றை விளக்கும் வரலாற்று ஆய்வியல் அறிஞர் க. நெடுஞ்செழியன்.
Published on
Updated on
1 min read

தமிழர்களின் பண்டைய கால பெருமைகளை அறிய கீழடி போன்று, திருப்பட்டூரிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வியல் அறிஞர் க. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் குடைவரை கோயில் ஆகிய இடங்களில் வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரலாற்று ஆய்வியல் அறிஞரும், திருச்சி பேராசிரியருமான க. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த களஆய்வில் மருத்துவர் கு. சிவராமன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சித்த மருத்துவர்கள், எழுத்தாளர் ஆதி. சங்கரர் தலைமையிலான வரலாற்று ஆய்வியல் அறிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆய்வின் போது, வரலாற்று ஆய்வியல் அறிஞர் க. நெடுஞ்செழியன் கூறியது:
ஆசீவக மதம், தமிழர்களிடம் ஜாதி, சமய உணர்வுகள் விதைக்கப்படுவதற்கு முன் தோன்றியது. ஆசீவகம் என்பதற்கு வாழ்க்கையில் துன்புற்றவர்கள் பற்றிக் கொள்ளும் இடம் எனப் பொருள். சுருக்கமாக சரணாகதி என்று அழைக்கலாம்.
ஆசீவக மதத்தவர்களின் சின்னமாக யானை இருந்துள்ளது. அதன்படியே, திருப்பட்டூர் அரங்கேற்ற அய்யனார் கோயிலில் சுவாமிக்கு எதிர்புறம் உள்ள வாகனமாக யானை சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெள்ளறை கோயிலின் கருவறை இரண்டு வெள்ளையானைகளின் மீதே அமைக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் குடைவறை ஓவியத்திலும் யானை இடம்பெற்றுள்ளது. சமய சண்டைகள் நிலவிய காலத்தில், வேதங்களை எதிர்த்த ஆசீவக சமயத்தின் குறியீடான யானையை, சைவ மத குறியீடான முதலை கடிப்பது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் ஆசீவக மதம் அழிக்கப்பட்டு, சைவ மற்றும் வைணவ மதங்கள் தமிழகத்தில் தழைத்தோங்கியதை காண முடிகிறது. இதனுடன் தமிழர்களின் பண்டையகால வரலாறும் சிதைக்கப்பட்டுள்ளது.
அறப்பெயர் சாத்தன் என்றழைக்கப்படும் முதலாம் அய்யனாரே ஆசீவகம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். இவர் கலை, கல்வி, கேள்வி ஞானம், வானவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கியுள்ளார். இவர் வழி வந்த அறிஞர்கள் பலர் தமிழ் உலகுக்கு சாஸ்திரம், அறிவியல், வானவியல் உள்ளிட்டவற்றில் அளப்பறிய பங்களிப்பு செய்துள்ளனர்.
இதற்கான சான்றுகள் பண்டைய கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், பெரியபுராணம், பிங்கல நிகண்டு உள்ளிட்டவற்றிலும், திருப்பட்டூர், சித்தன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும், அசோகரின் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக, மைசூரில் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ள 50 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளில் ஒன்று, அய்யனாரைப் பற்றி வெகுவாக விவரிக்கிறது.
அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மீட்கப்பட்டு, புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்த களஆய்வு. தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட "கீழடி'கள் உள்ள நிலையில், அதில் முதன்மையானதாக திருப்பட்டூர் விளங்குகிறது. இங்கு அகழாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தினால், தமிழர்களின் அறிவார்ந்த பல விஷயங்கள் வெளிஉலகுக்கு தெரியவரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com