சென்னையில் உள்ள 10 வருவாய் வட்டங்களுடன் (தாலுகா) திருவள்ளூர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 தாலுகாக்கள் இணைக்கப்பட உள்ளன.
திருவள்ளூரில் 4 தாலுகாக்களும், காஞ்சிபுரத்தில் ஒரு தாலுகாவும் சென்னை மாவட்டத்துடன் இணையவுள்ளன.
இதனால், இந்தத் தாலுகாக்களில் உள்ள பகுதிகளின் எல்லைகள் வருவாய் மற்றும் மாநகராட்சி அளவில் சென்னைக்குள்ளாக வரும்.
சென்னையில் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம், எழும்பூர், அமைந்தகரை, மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், கிண்டி என மொத்தம் 10 தாலுகாக்கள் உள்ளன.
மாநகராட்சி வார்டுகள்: சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் 200 வார்டுகள் உள்ளன. குறிப்பாக, புறநகரைச் சேர்ந்த பல பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன.
அதேசமயம், இந்தப் பகுதிகளின் தாலுகாக்கள், சென்னை மாவட்டத்துக்கு அருகிலுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்டுள்ளன.
தாலுகா ஒரு மாவட்டத்திலும், மாநகராட்சி எல்லை மற்றொரு மாவட்டத்திலும் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதைக் கருத்தில் கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி எல்லையும், தாலுகா எல்லையும் ஒரு மாவட்டத்துக்குள் இருக்கும்படி மாற்றியமைக்கப்பட உள்ளன.
5 வருவாய் வட்டங்கள்: தமிழக அரசின் சீரமைப்பு நடவடிக்கையின்படி, திருவள்ளூரில் உள்ள 12 தாலுகாக்களில் 4 தாலுகாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவும் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தாலுகாக்களும், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலந்தூர் தாலுகாவும் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளன.
சேவைகள் எளிது: தாலுகா ஒரு மாவட்டத்திலும், மாநகராட்சி எல்லை மற்றொரு மாவட்டத்திலும் இருக்கும்போது அவை தொடர்பான சேவைகளைப் பெற பொது மக்கள் இரு மாவட்டங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. தற்போது, இவை ஒரு மாவட்டத்துக்குள் வரும்பட்சத்தில் அரசின் சேவைகளைப் பெறுவது எளிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.