கழுவெளி சரணாலய அறிவிப்பு: ஆதரவும் அதிருப்தியும்

கழுவெளி சரணாலய அறிவிப்பு: ஆதரவும் அதிருப்தியும்

இயற்கை கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவெளி சரணாலயமாக மாற்றப்பட உள்ளது.

இயற்கை கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவெளி சரணாலயமாக மாற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவும் அதிருப்தியும் கலந்தே எழுந்துள்ளன.
மரக்காணம்-வானூர் இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது கழுவெளிப்பகுதி. பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் சங்கமிக்கும் இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இது தொடர்பாக, வானூர் சட்டப் பேரவை உறுப்பினர் சக்கரபாணி, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கழுவெளிப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைத்து, அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கெனவே வேடந்தாங்கல், புலிகட், கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், சித்திரங்குடி, கூந்தன்குளம், வெட்டாங்குடி, பிச்சாவரம் உள்ளிட்டப் பகுதிகளில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டம், கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வித்தியாசமான இயற்கை கட்டமைப்பு: சென்னை-புதுவை இடையே மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டிய கழுவெளி, வங்கக் கடல் நீரும், நிலத்தடி நன்னீரும் இணைகின்ற சதுப்புநிலப் பகுதியாக உள்ளது. பழைய மாங்குரோவ் காடுகள் என்றழைக்கப்படும் இப்பகுதியில், 160 ஏரிகள் வரை உள்ளன.
இந்த ஏரி நீரும், மழை நீரும், கடல் பகுதியின் முகத்துவார நீரும் இணைந்து சங்கமித்து உவர்ப்பு நீர் கொண்ட வித்தியாசமான பகுதியாக இது உள்ளது. இங்கு, உப்பு உற்பத்தி, மீன்பிடி, விவசாயம் பரவலாக நடைபெறுகிறது.
வெளிநாட்டுப் பறவைகள் சங்கமம்: இந்த மரக்காணம் கழுவெளிப்பகுதி ஆண்டுக்கு 40 ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்லும் இடமாக உள்ளது. இதில், வெளிநாட்டுப் பறவைகளான ஸ்பார்ட்பில்ட் பெலிகான், ஓப்பன்பில்டு, பெலிகான் ஸ்டோக், பிளமிங்கோ உள்ளிட்டப் பறவைகள் அதிகளவில் தஞ்சமடைகின்றன.
கழுவெளிப் பகுதியின் நீரோட்டம், விவசாய நிலப்பகுதிகள் இப்பறவைகள் தங்கி செல்லவும், இனவிருத்திக்கும் ஏற்றச் சூழலை அளிக்கிறது. கொடியக்கரை, பூந்தன்குளம் சரணாலயங்களுக்குச் செல்லும் பறவைகள், இந்த கழுவெளியில் தங்கிச் செல்லுமிடமாகக் கொண்டுள்ளன.
இப்பகுதி 740 சதுர கி.மீ. தொலைவு விரிந்து காணப்படுகிறது. 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்ட கழுவெளி, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் 15 கிராமங்களும், விவசாய நிலங்களும் உள்ளன.
இயற்கை கட்டமைப்பு பாதுகாக்கும் திட்டம்: கழுவெளி பறவைகள் சரணாலயம் அமைக்க ஏதுவான இடமாக உள்ளதாக அரசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது குறித்து, மாவட்ட வன அலுவலர் ஆனந்த் கூறியது:
தென்னிந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் புலிகட்டுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய கழுவெளிப்பகுதியாக இது உள்ளது. நிலத்தின் மீதுள்ள நன்னீரோடு, கடல் நீர் கலந்து உவர்ப்பு நீர் சங்கமிக்கும் கழுவெளி உலர்நில இடமாக உள்ளதால், அதிகளவில் பறவையினங்களும், இத்தகையச் சூழலை ஈர்க்கும் உயிரினங்களும் வாழும் பகுதியாக உள்ளது.
இப்பகுதிக்கு, ஆண்டு தோறும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கி பிப்ரவரி வரை 40 ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்கின்றன. அதற்கான உணவுகளும் இங்கே அதிகளவில் கிடைக்கின்றன.
நிகழாண்டு கணக்கெடுப்பில் குறிப்பாக 400 பிளமிங்கோ வெளிநாட்டுப் பறவைகள் வந்து சென்றுள்ளன. மாவட்டத்தில், அதிகளவில் ஏரி, நீர்நிலைகள் உள்ளதாலும் பறவைகள் அதிகளவில் வரத்துள்ளன.
பறவைகள் ஓய்வெடுக்கும் பகுதி: ஐரோப்பா, சீனா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வடநாடுகளிலிருந்து தமிழகம் வழியாக புலம்பெயரும் பறவைகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன.
இப்பகுதியில் அதிகளவில் பறவைகள் வரத்தும், அதன் கழிவுகளும் சேர்ந்து, உவர் நீரோடு வரும் தண்ணீர் விவசாயத்துக்கும் பயனுள்ளதாக உள்ளது. வனத் துறை சார்பில், இச்சூழலை தாங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
இயற்கை கட்டமைப்புகளையும், இயற்கையின் சுழற்சி முறையையும் பாதுகாக்கும் விதத்தில் சரணாலயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளுக்கும் அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. நிர்வாக ஆணை வந்தபின் ஆயத்தப் பணிகள் தொடங்கும் என்றார்.
ஊசுட்டேரி சரணாலய ஏற்பாடு தாமதம்: விழுப்புரம் மாவட்டத்தில், கழுவெளி அருகே புதுவை மாநிலத்தையொட்டியுள்ள ஊசுட்டேரி பகுதி பறவைகள் சரணாலயமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கழுவெளிப்பகுதியில் சரணாலய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், ஏற்கெனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிகளில், சுதந்திரமான விவசாயப் பணிகளுக்கும், சாலை அமைத்தல், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் இப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் போராடும் நிலை உள்ளது. மாநில எல்லைப் பிரச்னையில், பாசன வசதிகளும் பாதித்துள்ளன. சரணாலயமாக அறிவிக்கப்பட்டால், மேலும், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படும் என்று சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ஊசுட்டேரி பகுதியில் சரணாலயத்துக்காக அளவீடு பணிகள் நடந்துள்ளன. விரைவில், ஆட்சியர் தலைமையில் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, சரணாலயத்துக்கான பணிகள் நடைபெறும். இதனால், உள்ளூர் மக்களுக்கு நெருக்கடியின்றி, இயற்கையான சுற்றுலாத்தலமாக இப்பகுதி மேம்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com