மனுஷி, வேலு சரவணனுக்கு யுவ புரஸ்கார், பால சாகித்ய விருதுகள்

சாகித்ய அகாதெமியின் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ விருது "ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்' என்ற கவிதை நூல் எழுதிய பெண் கவிஞர் மனுஷி (எ) ஜெயபாரதிக்கும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய விருது
மனுஷி, வேலு சரவணனுக்கு யுவ புரஸ்கார், பால சாகித்ய விருதுகள்

சாகித்ய அகாதெமியின் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ விருது "ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்' என்ற கவிதை நூல் எழுதிய பெண் கவிஞர் மனுஷி (எ) ஜெயபாரதிக்கும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய விருது அத்துறையில் ஒட்டுமொத்தப் பங்களிப்பு வழங்கி வருவதற்காக வேலு சரவணனுக்கும் வழங்கப்படவுள்ளது. இவர்கள் இருவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.

இந்திய இலக்கியத் துறையில் மிக உயரிய அங்கீகாரமாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. சிறந்த சிறுகதை, நாவல், திறனாய்வு, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமி பிரதான விருது, சங்க காலம் மற்றும் மத்திய கால இலக்கியத்தைப் போற்றி படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களை கௌரவிக்க பாஷா சம்மான் விருது, மொழிபெயர்ப்பு நூல் விருது, 35 வயதுக்கு உள்பட்ட படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது, சிறந்த குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய விருது என பல்வேறு பிரிவுகளாக சாகித்ய அகாதெமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இது பற்றிய அறிவிப்பானது அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் சாகித்ய அகாதெமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளுக்கான விருதுகள் அப்போது அறிவிக்கப்பட்டன.
இதில் எழுத்தாளர்-கவிஞர் ஜெ.ஜெயபாரதியின் (மனுஷி) "ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்' எனும் கவிதைத் தொகுப்பு சாகித்ய யுவ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவரது கவிதைத் தொகுப்பை பேராசிரியர் பி. மதிவாணன், பி. செல்வபாண்டியன், பிரபஞ்சன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்தது.
கவிஞர் ஜெயபாரதி பெண்களின் உணர்வுகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை விருதுக்கான படைப்புகளில் அதிக அளவில் கவிதை நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதாவது 24 மொழிகளில் 16 கவிதை நூல்கள், ஐந்து சிறு கதைகள், இரு வாழ்க்கை வரலாறு நூல்கள், ஒரு கட்டுரை ஆகியவை இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளன.
தமிழ் தவிர, மலையாளத்தில் எழுத்தாளர் அஸ்வதி சசிகுமார் எழுதிய 'ஜோஸப்பின்ட மனம்' எனும் சிறுகதை நூல், தெலுங்கில் மெர்ஸி மார்க்கரெட் எழுதிய "மாத்தல மடுகு' எனும் கவிதை நூல், ஹிந்தியில் "தாரோ சிந்திக்கின் அக்ஷரோ கி வின்ட்டி" எனும் கவிதை நூல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கன்னடம், ஆங்கிலம், வங்காளி, உருது, அஸ்ஸாமி, போடோ, டோக்ரி, கஷ்மீரி, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படைப்பாளிகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பால சாகித்ய விருது: இதேபோல, 24 மொழிகளில் "பால சாகித்ய விருது' அறிவிப்புகளையும் சாகித்ய அகாதெமி வெளியிட்டது. ஒவ்வொரு மொழியிலும் மூவர் அடங்கிய தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.


இதில் வேலு சரவணன், குழந்தைகள் இலக்கியத்திற்கான ஒட்டுமொத்தப் பங்களிப்பை வழங்கியதற்காக விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை, வி.அண்ணாமலை (இமயம்), டாக்டர் ஆர். இளங்கோவன், டாக்டர் எம்.பழனியப்பன் ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரை செய்தது.
குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புலகில் இயங்கி வருபவர் வேலு சரவணன். இவர் குழந்தைகளுக்கான பாடங்களை நாடக வடிவிலும், கதை வடிவிலும் கற்றுத் தருவதற்கான பயிற்சியை அளித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர, குழந்தை இலக்கிய பங்களிப்புக்காக தெலுங்கில் வாசல நரஸய்யா, கன்னடத்தில் என்.எஸ். லட்சுமிநாராயண பட்டா ஆகியோருக்கும், உருது மொழியில் நஸீர் ஃபதேபுரி எழுதிய 'மேரா தேஷ் மஹன்' எனும் சிறுகதைத் தொகுப்பு, மலையாளத்தில் எஸ்.ஆர்.லால் எழுதிய "குஞ்ஞுண்ணியுடே யாத்ர புஸ்தகம்' எனும் புதினம் ஆகியவற்றுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தவிர, சிந்தி, சந்தாலி, சம்ஸ்கிருதம், ராஜஸ்தானி, பஞ்சாபி, ஒடியா, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் உள்பட பிற மொழிகளைச் சேர்ந்த குழந்தைகள் இலக்கியப் படைப்பாளிகளும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது விழா: தில்லியில் பின்னர் நடைபெறும் விழாவில், சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலையும், தாமிர பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். பால சாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு தில்லியில் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தாமிர பாராட்டுப் பட்டயமும், தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்படும் என்று சாகித்ய அகாதெமியின் செயலர் கே. ஸ்ரீநிவாசராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com