

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மூலம் அண்மையில் ஒரே சமயத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய சாதனை, சர்வதேச அளவில் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது என்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மைய இயக்குநர் பி.குன்னிகிருஷ்ணன் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின தின விழாவில் அவர் மேலும் பேசியது:
எங்களாலும் சாதிக்க முடியும் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வெற்றியை விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பெற்றிருக்கிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) எதிர்கொண்ட முயற்சி, உழைப்பு, தோல்வி, சவால், சோதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எஸ்ஆர்எம் மாணவர்களுக்கு பாராட்டு: விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் தகவல் தொடர்பு, தொலைதூர மருத்துவ உதவி, பருவநிலை கணிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வியக்கத்தக்க வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மினி செயற்கைக்கோள் உருவாக்கிய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது சந்திரனுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சிக்கான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. மாணவர்களின் கல்வித்திறனுடன் ஆராய்ச்சித் திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் குன்னிகிருஷ்ணன்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பேசியதாவது: மாணவர்களின் கல்வித் திறமை மட்டுமல்லாமல், ஆராய்ச்சி நடவடிக்கைகளும்தான் பல்கலைக்கழகங்களுக்குப் பெருமை சேர்க்கின்றன. மாணவர்கள் தங்களது ஆராய்ச்சித் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை அதிக செயல் முறை
பயிற்சி மிகுந்த பாடத் திட்டமாக உயர்த்தி மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் பாரிவேந்தர்.
விழாவில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தலைவர் பி.சத்யநாராயணன், புவனேசுவரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் வி.சந்திரசேகர், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனப் பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன், துணை வேந்தர் பிரபீர் கே.பக்ஷி, பதிவாளர் என்.சேதுராமன், ஆய்வுத் துறை இயக்குநர் டி.நாராயணராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.