தமிழறிஞர் - பேராசிரியர் மா.நன்னன் மறைவு

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எளியமுறையில் நடத்தி மக்களிடம் தமிழறிவைப் பரப்பியவருமான பேராசிரியர் மா.நன்னன் (94)
தமிழறிஞர் - பேராசிரியர் மா.நன்னன் மறைவு

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எளியமுறையில் நடத்தி மக்களிடம் தமிழறிவைப் பரப்பியவருமான பேராசிரியர் மா.நன்னன் (94) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
மறைந்த பேராசிரியர் நன்னனுக்கு, மனைவி ந.பார்வதி, மகள்கள் வேண்மாள், அவ்வை ஆகியோர் உள்ளனர். 
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்ற ஊரில் பிறந்த அவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற அவர் தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை 'நன்னன்' என மாற்றிக் கொண்டார்.
கல்லூரியில் பயின்றபோது 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். கடந்த 1942-ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
'நன்னன் முறை'... எழுத்தறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையை உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.
1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டவர். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது போன்ற பல்வேறு விருதுகளை பேராசிரியர் நன்னன் பெற்றுள்ளார்.
மறைந்த நன்னனின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டை மயானத்தில் புதன்கிழமை (நவ.8) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 99624 01195, 22200643.
அரசியல் தலைவர்கள்- தமிழறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்: பேராசிரியர் நன்னன் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன், தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com