தமிழ் இலக்கியத்தில் கரிசல் எழுத்துக்களின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் கி.ராஜநாராயணன் என்று புகழாரம் சூட்டினார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கி.ராஜநாராயணனின் 95 ஆவது பிறந்த நாள் விழாவில் வண்ணதாசன் பேசியது:
கேரள மாநிலத்தில் எழுத்தச்சன் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல பல இளம்தலைமுறை எழுத்தாளர்கள், வாசிப்பாளர்களுக்கு எழுத்தறிவித்தவராக கி.ராஜநாராயணன் விளங்கினார்.
தமிழ் இலக்கியத்தில் கரிசல் எழுத்துக்களின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் கி.ரா.. அவரது வழியில் பின்னத்தி ஏராக பா.செயப்பிரகாசம், பூமணி, சொ.தர்மன் உள்ளிட்டோர் பயணித்து வருகிறார்கள். அதனால் கரிசல் காட்டில் உழுது உழுது மண் புரண்டு கொண்டே இருக்கிறது.
கதவு உள்ளிட்ட அவரது படைப்புகள் அனைத்தும் வாசிப்பாளர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சமாகும். திறனாய்வாளர் தி.க.சி.யின் மகனாக இருந்ததால் கி.ரா. உள்ளிட்ட பலரது கடிதங்கள், நூல்களை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதன்படி கதவு சிறுகதை பிரசுரிக்கும் முன்பாக கைப்பிரதியின்போதே படித்து பார்த்து வியந்தேன். அதேபோல எனது கதையை அவரிடம் கொடுத்து திருத்தித்தரும் ஆசானாகவும் ஆக்கிக்கொண்டேன். கி.ரா.வின் வலது கரம் போல கழனியூரான் செயல்பட்டார்.
மனதை இறுக்கமாக்கும் துயரமான கதைகளுக்குக்கூட ஆனந்தமான சங்கீதம் கொடுத்து தனது படைப்பில் வித்தியாசத்தை ஏற்படுத்தினார். குழந்தைப் பருவ நிகழ்வுகளை, ஆனந்தக் கழிப்புகளை தனது பாணியில் எழுத்தாக்கி வாசகர்களைக் கவர்ந்தவர். கதைத் தலைப்புகளில் நுட்பத்தோடு செயல்பட்டால் உச்சம் பெறலாம் என்பதைக்கூட அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும்.
புதிய வாசிப்பாளர்கள் அனைவரும் கி.ரா.வின் அனைத்து படைப்புகளையும் படித்தறிய வேண்டும். அவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்துள்ள புதுவை இளவேனில், கழனியூரானின் தொகுப்பை வெளிகொணர்ந்துள்ள கார்த்திக் புகழேந்தி ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
விழாவில் புதுவை இளவேனில் இயக்கிய இடைசெவல் ஆவணப்படமும், மதரா இயக்கிய கதவு குறும்படமும் திரையிடப்பட்டது. கழனியூரனின் கிரா என்றொரு கீதாரி என்ற நூல் வெளியிடப்பட்டது. ம.சு. மதியழகனின் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
தமுஎகச மாவட்டச் செயலர் இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், எம்.எம்.தீன், உதயசங்கர், கவிஞர் கிருஷி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மயன் ரமேஷ்ராஜா, ஏ.பாலசுப்பிரமணியன், சுந்தர், முத்துக்குமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மா.முருகன் நன்றி கூறினார்.