முறைகேடுகளை முழுமையாக தவிர்க்க இனி ஆன்லைனில் காவலர் தேர்வு

காவலர் தேர்வை இனி ஆன்லைனில் நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
முறைகேடுகளை முழுமையாக தவிர்க்க இனி ஆன்லைனில் காவலர் தேர்வு
Updated on
3 min read

காவலர் தேர்வை இனி ஆன்லைனில் நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் ஏற்படும் காவலர் பணியிடங்களுக்கு 1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல்துறையே நேரிடையாக இளைஞர்களைத் தேர்வு செய்து வந்தது. இதேபோல தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கும் நேரிடையாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், அதன் பின்னர் காவல்துறை, தீயணைப்புத்துறை,சிறைத்துறைக்கு தேவையான தகுதியான இளைஞர்களை முறையாக தேர்வு செய்வதற்கும், முறைகேடுகளை தடுப்பதற்கும் தனியாக ஒரு தேர்வு வாரியம் தேவை என்பதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை அமைத்தது.

இந்தத் தேர்வுக் குழுமத்தின் மூலமாகவே தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு காவலர்கள் இப்போது தேர்வு செய்யப்படுகின்றனர்.

நவீன காலத்துக்கு ஏற்றாற்போல இந்தக் குழுமம், தன்னை புதுப்பித்து வருகிறது. தொடக்ககாலத்தில் விண்ணப்பிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வு முடிவுகளை அறிவிப்பது என அனைத்துப் பணிகளும் காகித வடிவில் இருந்தன. இப்போது அதை படிப்படியாக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கணினிமயமாக்கி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வுக்கு அஞ்சல் மூலம் மட்டுமன்றி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. இத் தேர்வு எழுதுவதற்காக 6.23 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். இந்த தேர்வு முடிவையும், கேள்விக்கான விடையையும் இணையதளத்தில் தேர்வுக் குழுமம் வெளியிட்டது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, கிராமப்புற இளைஞர்களிடம் முதலில் அதிருப்தி ஏற்பட்டாலும், பின்னர் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதில் சில வசதிகள் இருப்பதும்,விண்ணப்பம் சரியாக சேர்ந்ததற்கு உத்தரவாதம் கிடைத்ததினாலும் வரவேற்கப்பட்டது.

மேலும் இத் தேர்வுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 3.20 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்வு எழுதுகிறவரின் பெயர், பதிவு எண்ணுக்குப் பதிலாக விடைத்தாளில் பார்கோடு மட்டுமே இடம் பெற்றிருக்கும் முறையை தேர்வு குழுமம் அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், அடுத்ததாக தேர்வை ஆன்லைனில் நடத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை, ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மத்திய தேர்வு வாரியங்களிடமிருந்து பணியாளர் தேர்வு குழுமம் பெற்று வருகிறது. ஏனெனில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் அகண்ட அலைவரிசை இணையத்தள இணைப்பு, மின்வெட்டு இல்லாத மின்சார வசதி, சிறு பழுதோ குறைபாடோ இல்லாத கணினி வசதி, பயோமெட்ரிக் தொழில்நுட்பம் வசதியுடனும் வெப்கேமரா இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் இப்போது ரயில்வே தேர்வு வாரிய தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் நடத்தப்படுவதால், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் எளிதாக அமைகின்றன. அதேவேளையில் காவலர் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்பதால், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

30 ஆயிரம் பேர் மட்டுமே எழுத முடியும்: இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உயர் அதிகாரி கூறியது: இளைஞர்கள் தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதுவதை விட, ஆன்லைனில் தேர்வு எழுதுவது மிகவும் பாதுகாப்பானது, எளிதானது. காவலர் தேர்வில் எள்ளளவும் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கான திட்ட வரைவை தயாரித்து வருகிறோம்.

மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பேரே ஆன்லைன் தேர்வு எழுதும் கட்டமைப்பே இப்போது நம்மிடம் உள்ளது. ஏனெனில் ஆன்லைன் தேர்வுக்கு கணினி மட்டுமன்றி ஒவ்வொரு கணினியுடன் பயோமெட்ரிக் மற்றும் வெப்கேமரா இணைப்பு தேவைப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு வசதிகளும் மாநிலத்தில் பெரும்பாலான கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருப்பதில்லை. ஆனால் காவலர் தேர்வுக்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது 3 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இதனால் தேர்வுகளை பல கட்டங்களாக நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான கேள்விகள் ஒரே தரத்தில் அமைப்பது தொடர்பாகவும் கல்வியாளர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்.

அவுட்சோர்சிங்: தமிழகத்தில் ஏற்கெனவே ஆன்லைன் தேர்வுகளை நடத்தும் டி.சி.எஸ்., எச்.சி.எல்., உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் நடத்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஆன்லைன் தேர்வை தனியாக நடத்துவதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இப்போதைக்கு தேர்வு குழுமத்திடம் இல்லாததினால், அவுட்சோர்சிங் முறையை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிற்காலத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் தேர்வு குழுமத்தில் உருவாக்கப்பட்ட பின்னர், காவலர் தேர்வு நேரடியாக நடத்தப்படும். ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்குரிய திட்டத்துக்கு அரசிடம் அனுமதி கிடைத்த பின்னர், அதற்குரிய அறிவிப்பு முறையாக வெளியிடப்படும் என்றார் அவர்.

அதேவேளையில் 309 தொழில்நுட்ப பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள், 300 கைரேகைப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிடுகிறது. இந்த தேர்வுக்கு 40 ஆயிரத்துக்கும் குறைவானவர்களேவிண்ணப்பிப்பார்கள் என தேர்வு குழும அதிகாரிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத் தேர்வை, முதல் கட்டமாக ஆன்லைனில் நடத்த சீருடை பணியாளர் தேர்வு குழும அதிகாரிகள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஏப்ரல் இறுதியில் தேர்வு முடிவு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிடப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5538 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடம், தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடம், 46 பின்னடைவு பணியிடம் என மொத்தம் 6140 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 11-ஆம் தேதி 232 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இத் தேர்வை சுமார் 3.20 லட்சம் பேர் எழுதினர்.

இப்போது விடைத்தாள் மதிப்பீடும் பணி தேர்வு குழுமத்தின் ஐ.ஜி.முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் விடைத்தாள் மதிப்பீடும் பணி முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீடும் பணி, ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. அந்த வாரமே எழுத்துத் தேர்வுக்கான முடிவை வெளியிடுவதற்கு தேர்வு குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை மே மாதம் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இதில் தேர்வாகிறவர்களுக்கு ஜூன் மாதம் பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com