மகசூலை அதிகரிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி

பயிர் மகசூலை அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பமான சோலார் விளக்குப் பொறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மகசூலை அதிகரிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: பயிர் மகசூலை அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பமான சோலார் விளக்குப் பொறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கே.கண்ணன் கூறியது:
பொதுவாக, சாகுபடி செய்த பயிர்களை பூச்சிகள் தாக்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். பூச்சிகளைக் கொல்வதற்கு ரசாயன பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துவர். இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்கு அதிகச் செலவை ஏற்படுத்தி லாபம் குறைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க கருவாட்டுப் பொறி, மஞ்சள்வர்ண ஒட்டும் பொறி, விளக்குப் பொறி, இனக் கவர்ச்சி பொறி என பல்வேறு நடைமுறைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தகைய நிலையில், விவசாயிகளால் எளிதில் கையாளக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சோலார் விளக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 
சோலார் விளக்குப் பொறி: சோலார் விளக்குப் பொறி என்பது விவசாயத்துக்குப் பயன்படும் சுற்றுச்சூழல் மாசற்ற பூச்சி மேலாண்மை கருவி ஆகும். இந்தக் கருவியை நெல், காய்கறிப் பயிர், தோட்டப் பயிர், எண்ணெய் வித்துப் பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் பயன்படுத்தலாம். 
சிறப்பம்சங்கள்: புற ஊதா ஒளித் தொழில்நுட்பம் மூலம் தாய் அந்துப் பூச்சிகளைக் கவரக் கூடியது. மேக்ரோ கண்ட்ரோலர் மூலம் தானியங்கி செயல்பாடு நடைபெறுகிறது. (மாலை 6 மணிக்கு மேல் தானாகவே விளக்குப் பொறி இயங்கும்) 3.15 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும். பிறகு தானாகவே அணைந்து விடும். இந்தப் பொறியை இயக்க மின்சாரம் தேவையில்லை. முற்றிலும் சூரிய சக்தியால் செயல்படக் கூடியது. அதிகம் ஒளிரக் கூடிய எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்டது. ஓர் இடத்திலிருந்து எளிதில் மற்ற இடத்துக்கு மாற்றும் வசதி கொண்டது. 
நன்மைகள்: பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. குறிப்பாக, தாய் அந்துப் பூச்சிகள், தண்டு துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளைப் பூச்சி, பழ வண்டு, மேலும் அனைத்து பறக்கும் பூச்சிகளையும் கவரக் கூடியதாக இந்த சோலார் விளக்குப் பொறி காணப்படுகிறது. ஒரு தாய் அந்துப் பூச்சியைப் பிடிப்பதன்மூலம் அதன் மூலம் உருவாகக் கூடிய 300-க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். இந்த விளக்குப் பொறி மூலம் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காண இயலும். 
சோலார் விளக்குப் பொறியைப் பயன்படுத்துவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் பெரும் அளவில் மகரந்தச் சேர்க்கைக்கு உறுதுணையாக இருந்து, மகசூலை அதிகரிக்க உதவுகிறது. மேலும், பொருளாதார ரீதியாக இந்த விளக்குப் பொறியைப் பயன்படுத்துவதன் மூலம் ரசாயன பூச்சிகொல்லி செலவினத்தைக் குறைக்கலாம். சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இயலும். மனித சக்திக்கான கூலிச் செலவைக் குறைக்கிறது. 
பயன்பாடு: ஓர் ஏக்கர் பரப்பளவில் குறைந்தது 5 சோலார் விளக்குகளைப் பயன்படுத்தலாம். பயிரின் ஓர் அடி உயரத்தில் இந்த விளக்குப் பொறியை அமைக்க வேண்டும். விளக்குப் பொறி தட்டில் தண்ணீர் அல்லது சோப்பு கலந்த நீர் அல்லது மண்ணெண்ணெய் கலந்த நீர் போன்ற திரவத்தை ஊற்றி வைக்க வேண்டும். வேளாண் பயன்பாட்டுக்குத் தேவை இல்லாதபோது வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம். 
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் மானியத்துடன் 552 விவசாயிகளுக்கு இந்த சோலார் விளக்குப் பொறி வழங்கப்பட உள்ளது. மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அனுகலாம் என வேளாண்மை துறை இணை இயக்குநர் கே.கண்ணன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com